Govt Job: ஹேப்பி நியூஸ்.. இந்த ஆண்டு எவ்வளவு அரசு காலி இடங்கள் நிரப்பப்படும்?- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதில்!
எனினும் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் எத்தனை என்பது குறித்து கூறப்படவில்லை.

அரசு வேலைகளில் இந்த ஆண்டு எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது என்பதற்கான உத்தேச ஆண்டு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கை ஜூலை 15ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிக்கை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குரூப் 5ஏ தேர்வு, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நடக்கிறது.
தொழில்நுட்பத் தேர்வு தேதிகள் என்னென்ன?
அதேபோல பல்வேறு தனித் தனித் தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்த தொழில்நுட்பத் தேர்வுகள், இர்ண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுகள் (நேர்காணல் கொண்ட, நேர்காணல் அல்லாத) என்று இவை அழைக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு (நேர்காணல் ) ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்றும் நேர்காணல் அல்லாத தேர்வுகள் ஆகஸ்ட் 4ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான டிப்ளமோ/ ஐடிஐ அளவிலான தேர்வுகள், ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.
தேர்வர்களுக்கு https://www.tnpsc.gov.in/English/annual_planner.html என்ற இணைப்பில் தேர்வு தேதிகள் விளக்கமாக வெளியிடப்பட்டு இருந்தன.
குறிப்பிடப்படாத காலி இடங்கள்
எனினும் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் எத்தனை என்பது குறித்து கூறப்படவில்லை. காலி இடங்களின் எண்ணிக்கை, அந்தத் தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்து இருந்தார்.
எனினும் தேர்வர்கள் காலி இடங்களின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தனியார் நாளிதழிடம் கூறும்போது, ’’இந்த நிதி ஆண்டில் (2024- 2025) ஒதுக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.
ஏப்ரல் மாதத்தில்தான் தெரிய வரும்
அடுத்த நிதி ஆண்டுக்கான காலியிடங்களின் விவரம், இந்த நிதியாண்டு முடிந்த பிறகே தெரிய வரும். அதாவது மார்ச் முடிந்தபிறகு, ஏப்ரல் மாதத்தில்தான் தெரிய வரும். குரூப் 1, 2 4 என சம்பந்தப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும்போது, அதில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.