TN 12th Result: 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு -”பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்” - அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தொடர்ந்து பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தொடர்ந்து பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோருக்கு கோரிக்கை:
t12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “தேர்வுக்கு வராத 47 ஆயிரம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைப்பது குறித்து இலக்கு நிர்ணயித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அடையாளம் காணப்பட்ட மாணவர்கள், அடையாளம் காணப்பட முடியாத மாணவர்கள் என பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட மாணவர்களை நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, தேர்வு எழுதுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
”பெற்றோர்கள் செய்ய வேண்டியது”
தேர்வு முடிவுகளை பார்த்து கொண்டிருக்கும் அனைத்து பெற்றோருக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். பிள்ளைகள் எந்த மதிப்பெண் எடுத்து இருந்தாலும் சரி அவர்களை ஊக்கப்படுத்துவது தான் நமது கடமை. மதிப்பெண் குறைந்துவிட்டது, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்றாலும் கூட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களும் இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காக தான் உடனடியாக நடைபெறும் தனித்தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வயதானது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியது. எனவே அவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்கத்தை தரக்கூடிய முயற்சியில் பெற்றோர் ஈடுபட வேண்டும்.
”அரசு செய்ய இருப்பது”
தமிழ்நாட்டில் உள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில், உயர்கல்வி வழிகாட்டுதல் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், பள்ளி நிர்வாக குழுவை சேர்ந்த நபர், கல்வியாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் இருப்பர். இந்த குழுவை மாணவர்கள் அணுகினால் அவர்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப தேவையான ஆலோசனைகளை வழங்குவர். குறிப்பாக உயர்கல்விக்காக என்ன செய்ய வேண்டும், தனது ஆர்வத்திற்கு ஏற்ப எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும், அதற்காக எந்த கல்லூரியில் சேர வேண்டும், எப்படி விண்ணப்பது, இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டி யார் என்பது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உதவும். அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பெற்றொருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன் .
பெற்றோருக்கு கோரிக்கை:
அரசின் திட்டங்களை பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, மதிப்பெண் குறைந்துவிட்டது, தேர்ச்சியடையவில்லை என்று கூறி பிள்ளைகளை தொந்தரவு செய்யக் கூடாது. தேர்வு எழுதாத மாணவர்கள் உடனடியாக துணை தேர்வுகளை எழுதி, உயர்கல்வியில் சேர வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன். மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம், எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.
தேர்வு முடிவுகள்:
12 ஆம் வகுப்பு தேர்வு எழுத 8.65 லட்சம் மாணவ,மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,21,013 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 4, 05, 753 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம், 3லட்சத்து 82, 371 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3, 49, 697 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.