TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை டெட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணித் தொடர்ச்சி மற்றும் பதவி உயர்வு தொடர்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் 01-09-2025 அன்று வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்தத் தீர்ப்பில், கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குட்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களும் TET தகுதி பெற வேண்டும் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக் காலம் மீதமுள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்றும், பதவி உயர்வுக்கும் TET தகுதி அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
டெட் தேர்வு கடினம்
இதைத் தொடர்ந்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசே நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு அண்மையில் நடைபெற்ற நிலையில், டெட் தேர்வு கடினமாக இருந்ததாக புகார்க் குரல்கள் எழுந்தன.
தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வந்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க கோரி சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கொள்கை முடிவு எடுக்க அவகாசம்
இந்த வழக்கு இன்று (ஜூலை 8ஆம் தேதி) நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ’’பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளது. இதனால் அவகாசம் தேவை’’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடைக்காலத் தடை
இதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா, ''அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது'' எனக் கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























