TN School Reopen: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? விளாசும் வெயில்- அமைச்சர் அன்பில் பேட்டி
Tamil Nadu School Reopening 2025: திருச்சி மாவட்டத்தில் வெயில் 104 டிகிரியைத் தாண்டி விட்டது. இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிந்தது. தொடர்ந்து 25.04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் நேற்று (30.04.2025) வரை இருந்தது.
பள்ளிகள் திறப்பு எப்படி?
தொடர்ந்து 2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 ( திங்கள் கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . இந்த நிலையில் வெயில் கொளுத்தி வருவதால், அந்த நேரத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து உள்ளார்.
இன்று திருச்சியில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ’’திருச்சி மாவட்டத்தில் வெயில் 104 டிகிரியைத் தாண்டி விட்டது. இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதல்வர் அலுவலகம் சொல்வதைப் பொறுத்து, முடிவு எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.























