TN 10th Result 2024: 497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு எழுதிய 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10-ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?
தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம். அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள்:
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் 12 முதல் 22-ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும்போது தமிழ் வழி விடைத் தாள்களை தமிழ் வழி ஆசிரியர்களும், ஆங்கில வழி விடைத் தாள்களை ஆங்கில வழி ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.
முன்னதாக கடந்த திங்களன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், 92.37% (3.93 லட்சம்) மாணவர்கள், 96.44% (3.25 லட்சம்) மாணவிகள் என தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7532 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அதில் 100% தேர்ச்சி அடைந்த பள்ளிகளாக 2400 பள்ளிகள் இருக்கின்றன. 26352 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வெழுதியத்தில் 112 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளபடி, 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 32,164 ஆண்களும் 19,755 பெண்களும் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 5744 மாணவர்கள், மாணவிகள் 5805 என 11,549 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 4975 மாணவர்களும், 5474 மாணவிகள் என மொத்தம் 10,449 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.61 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.30 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.48% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 86.31 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 90.48 சதவீதம் எடுத்து 4.17 சதவீதம் அதிகம் ஆகும். மாநில அளவில் 27 வது இடம் பெற்றுள்ளது. மேலும் 9 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 497 மதிப்பெண்கள் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.