TN 10th Result 2023: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்; தேதி, நேரம் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எப்படி?- முழு விவரம்
Tamil Nadu 10th Result 2023 Date and Time: பள்ளி மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன.
Tamil Nadu 10th Result 2023: தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து முடித்தனர். இந்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேதி வாரியாகத் தேர்வு விவரம்
குறிப்பாக, ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 10ஆம் தேதி ஆங்கிலப் பாடம், ஏப்ரல் 13ஆம் தேதி கணிதப் பாடம், ஏப்ரல் 15-ல் விருப்ப மொழித்தாள் மற்றும் ஏப்ரல் 17-ல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 20ஆம் தேதி அன்று சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணி மே 3ஆம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதைத் தொடர்ந்து இவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
எப்போது, எங்கே?
பொதுத் தேர்வு முடிவுகளை, மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?
மாணவர்கள்
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குத் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர்கள் உள்ளிட வேண்டியது அவசியமாகும்.
செல்போன் மூலமாக…
மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பிற வழிகள் என்னென்ன?
அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களில் (National Informatics Centres) தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தவிர்த்து, அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.