10th Original Marksheet: ஆக.29 முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; பெறுவது எப்படி?
Tamil Nadu 10th Original Marksheet 2024: மாணவர்கள், ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். தலைமை ஆசிரியர்கள் மூலம் இந்த சான்றிதழ் விநியோகம் செய்யப்படும்.

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படித்த, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர்.
அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த முறை 0.16% கூடுதலாக தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது.
மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
இதற்கிடையே மாணவர்கள் 13.05.2024 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றனர். மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல், மறு மதிப்பீடு நடந்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழைப் பெறுவது எப்படி?
மாணவர்கள், ஆகஸ்ட் 29 காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். தலைமை ஆசிரியர்கள் மூலம் இந்த சான்றிதழ் விநியோகம் செய்யப்படும்.
தனித் தேர்வர்களுக்கு..
அதேபோல தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெறலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

