அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி- எழும் கேள்விகள்
அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு- அன்புமணி.

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் மூடுவிழா நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:
''தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இரு ஆண்டுகளில் 5.31 லட்சம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, திட்டமிட்டு அரசு பள்ளிகளை சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த மத்திய அரசு, இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் & ஆசிரியர்கள் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2022&23ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 37,658 அரசு பள்ளிகளில் 50 லட்சத்து 42,026 மாணவர்கள் பயின்று வந்தனர். இது 2023&24ஆம் ஆண்டில் 48 லட்சத்து 40.034 ஆகவும், 2024&25ஆம் ஆண்டில் 45 லட்சத்து 10,612 ஆகவும் குறைந்திருக்கிறது. அதாவது இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.
5 முதல் 6% அளவுக்கு குறைவு
திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்றால், திமுகவின் ஒட்டுமொத்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 முதல் 6% அளவுக்கு குறைந்து வருவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த 2015& 16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 45.10 லட்சமாக குறைந்து விட்டது என மத்திய அரசே தெரிவித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் குறைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.
என்னென்ன காரணங்கள்?
அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக போதிய நிதி ஒதுக்காதது, ஆசிரியர்களை நியமிக்காதது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஆகியவை ஆகும். இரண்டாவது, தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிப்பது ஆகும்.
பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் ‘‘மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020- 21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாக இருந்தது.
இது 2020-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%ஆகும். 2024-25ஆம் ஆண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், கல்விக்கு ரூ.44,042 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் குறைந்தது 15% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது. தமிழக அரசு பள்ளிகளுக்கு வெகு காலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும் 2022&23ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2024&25ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 7884 குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வந்தால், மாணவர் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியாது.
அடுத்ததாக பத்தாண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 63.42 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறியதால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றனர்''.
இவ்வாறு அன்புமணி சாடி உள்ளார்.






















