அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
’’2021- 2022ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள், 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற வழிவகை செய்யப்படுகிறது.
அதன் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளைப் பெற வழிவகை செய்யும் பொருட்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் (SSA) மூலம் உடற்கல்வித் துறை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு விளையாட்டு உபகரணங்கள் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாம்: Indian Students: இன்னும் உக்ரைனிலேயே இருக்கும் இந்திய மாணவர்கள்; எத்தனை பேர் தெரியுமா?- மத்திய அரசு தகவல் https://tamil.abplive.com/news/india/around-1-100-indian-students-currently-in-ukraine-government-89728
எனவே, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல் நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் இந்தத் தகவலை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடவும், இதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்று இருப்புக் கோப்பு பராமரிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் முதன்மைக் கல்வி அலுவலர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: வரலாற்றில் முதல்முறை: அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனைவரும் நடத்தும் நாடகம்- அமைச்சர் அன்பில் பங்கேற்பு https://tamil.abplive.com/education/chennai-mogappair-government-primary-school-students-stage-bharathiyar-play-minister-anbil-participating-89698