வரலாற்றில் முதல்முறை: அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் அனைவரும் நடத்தும் நாடகம்- அமைச்சர் அன்பில் பங்கேற்பு
அரசுப் பள்ளி வரலாற்றில் முதல் முறையாக, தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் பாரதியார் குறித்த வாழ்க்கை வரலாற்று நாடகம் நாளை நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளி வரலாற்றில் முதல் முறையாக, தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் பாரதியார் குறித்த வாழ்க்கை வரலாற்று நாடகம் நாளை நடைபெற உள்ளது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பல உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
அரசு தொடக்கப் பள்ளிகள் என்றாலே ஒற்றை, இரட்டை இலக்கத்தில்தான் மாணவர்கள் படிப்பார்கள் என்ற நிலையை மாற்றி, 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் தலைநகர் சென்னையில் கம்பீரமாக இயங்கி வருகிறது முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளி. குறிப்பாக 141 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 2009ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக இணைந்த ஆசிரியர் கிருஷ்ணவேணி அனைத்து மாற்றங்களுக்கும் வித்திட்டவர்.
அரசு தொடக்கப் பள்ளியில் அசத்தல் அம்சங்கள்
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தினசரி காலை வேளைகளில் அம்மா உணவகத்தில் இருந்து இலவச உணவு, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக் கற்பித்தல் பயிற்சிகள், படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், பறை, சிலம்பம், கராத்தே என கலை வகுப்புகள் என அசத்தி வருகிறார் ஆசிரியர் கிருஷ்ணவேணி.
கீரை விற்கும், பூ விற்கும் பெற்றோரின் குழந்தைகள், சென்ட்ரிங் வேலை, கொத்தனார், பெயிண்டிங், வீட்டு வேலை உள்ளிட்ட தினக் கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள் தொடங்கி, ஆசிரியரின் குழந்தைகள், வங்கி மேலாளரின் குழந்தைகள், கல்லூரி பேராசிரியரின் குழந்தைகள், தனியார் நிறுவனத்தில் பணி பரியும் பெற்றோரின் குழந்தைகள் மற்றும் 13 மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் என மொத்தம் 141 குழந்தைகள் சென்னை பெரு மாநகராட்சி முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர்.
கற்பித்தலை மட்டுமே செய்யாமல் பள்ளியை கலைக் கூடமாக்க வேண்டும் என்னும் ஆசிரியர் கிருஷ்ணவேணி, அரசுப் பள்ளி வரலாற்றில் முதல் முறையாக, தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் பாரதியின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை ஒருங்கிணைத்து வருகிறார்.
1 மணி நேர நாடகம்
பள்ளியில் படிக்கும் 141 குழந்தைகளும் ஒருங்கிணைந்து பாரதியின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை அரங்கேற்ற உள்ளனர். 1 மணி நேரம் நடைபெற உள்ள இந்த நாடகத்தில், மாணவர்களின் கொஞ்சும் மழலையில் வீர வசனங்கள், காண்போர் கண்ணீர் விடும் காட்சிகள், சமூக சிந்தனையை தூண்டும் காட்சிகள் என புல்லரிக்க வைக்கும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 10 வயதுக்கு உட்பட்ட 141 குழந்தைகள் நாடகத்தில் காண்போரை அதிர வைக்கக் காத்திருக்கின்றனர்.
சின்னஞ்சிறு குழந்தைகளின் அசத்தல் நிகழ்வு, சென்னை கோட்டூர் புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (டிசம்பர் 11) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இல்லம் தேடிக் கல்வி திட்டப் பொறுப்பாளர் இளம் பகவத் ஐஏஎஸ், சமக்ர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநர் சுதன் ஐஏஎஸ், பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி, எஸ்சிஇஆர்டி இயக்குநர் லதா, சென்னை முதன்மைக் கல்வி அலுவர் மார்ஸ், நடிகர் பால சரவணன் மற்றும் பல உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். பாரதி பாலா இந்த நாடகத்தை இயக்குகிறார்.
முன் மாதிரி தலைமுறைச் சிறார்களை வாழ்த்துவோம்.