(Source: Poll of Polls)
தஞ்சையில் கொலை நடந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை - அமைச்சர் அதிரடி உத்தரவு - எதற்கு தெரியுமா?
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டபிறகே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அருகே ஆசிரியர் குத்திக்கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டபிறகே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கோவி. செழியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஆசிரியர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின்போது தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எஸ்பி ஆசிஷ் ராவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உயிரிழந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கோவி.செழியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொலை நடந்த பள்ளியின் மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். கவுன்சிலிங் கொடுத்த பிறகுதான் பள்ளி திறக்கப்படும். பள்ளி பாதுகாப்பிற்கு காவலர், சிசிடிவி பொருத்தும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களின் அச்ச உணர்வை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடூரமான செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் ரமணி (25). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில் ரமணிக்கு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளயில், பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியை பணி கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 10ம் தேதி தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதனிடையே ரமணி வசிக்கும் அதே சின்னமனை பகுதியை சேர்ந்த மதன்குமார் (28) என்பவரை காதலித்ததாக தெரிகிறது. 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்த மதன்குமார் 4 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணியாற்றியுள்ளார். தனது தங்கையின் திருமணத்திற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் மீண்டும் சிங்கப்பூருக்கு செல்லவில்லை.
ஒன்றரை வருடமாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் கேட்குமாறு பெற்றோரிடம் கோரியுள்ளார் மதன். பெண் வீட்டாரும் சம்மதித்த நிலையில் மதனின் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி ரமணி வீட்டார் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். ரமணியும் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மதன் ரமணி வேலை செய்யும் பள்ளிக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றார். ஆனால் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை மடக்கி பிடித்தனர்.