Medical Colleges: மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து: பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்துக- அன்புமணி
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து உள்ளதால், பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து உள்ளதால், பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களில் 500 பேருக்கு இணைப் பேராசிரியர்களாகவும், இணைப் பேராசிரியர்களில் 450 பேருக்கு பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து ஒரு வாரம் கடந்தும் கூட, அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இது எந்த வகையிலும் நியாயமல்ல.
ஒரு வாரத்தில் பதவி உயர்வு
தமிழக அரசு நினைத்தால், ஒரு வாரத்தில் கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க முடியும் என்றாலும் கூட, பல பத்தாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட விதிகளைத்தான் அரசு கடைபிடித்து வருகிறது என்பதால், கலந்தாய்வு நடைமுறை நிறைவடைய குறைந்தது 3 மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 45 துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், 10 துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டும்தான் 2021-ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வேகம் போதுமானதல்ல.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பதவி உயர்வு விரைவாக வழங்கப்பட வேண்டும். பேராசிரியர்களின் பணி மூப்பு, கல்வித்தகுதி, சிறப்புத் தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓரிரு நாட்களில் இதை செய்வது சாத்தியமானது தான்.
தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் பெறப்பட்டிருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு மாறாக ஓராண்டுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருகிறது.
அங்கீகாரம் மீண்டும் ரத்து செய்யப்படும் ஆபத்து
இவை அனைத்திற்கும் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதுதான் காரணம் ஆகும். இப்போது காலியிடங்கள் விரைவாக நிரப்பப்படாவிட்டால், பல மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் மீண்டும் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்படும். அதற்கு தமிழக அரசே வழிவகுத்து விடக் கூடாது.
தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக மருத்துவப் பேராசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதற்கு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட நியாயமான காரணங்கள் இருந்திருக்கலாம். நடப்பாண்டில் அந்தக் கலந்தாய்வை நடத்த அரசு திட்டமிட்ட நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அந்தக் கலந்தாய்வுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் மறைமுகக் காரணமாக அமைந்தது.
நீதிமன்றத் தடையை நீக்கி மருத்துவப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்தும்படி கடந்த மாதமே பா.ம.க. வலியுறுத்தியது. அப்போதே மருத்துவப் பேராசிரியர் பதவி உயர்வுக்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தால், உயர்நீதிமன்றத் தடை இப்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக கலந்தாய்வை நடத்தியிருக்க முடியும். ஆனால், எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படாததால் பதவி உயர்வு கலந்தாய்வு தாமதமாகிறது.
சாத்தியமாகாது
கடந்த காலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் கூட, பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களை ஒரு கல்லூரியில் இருந்து இன்னொரு கல்லூரிக்கு இடமாற்றம் செய்து, அங்கீகாரம் பெறுவது வழக்கமாக இருந்து வந்தது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கைரேகை வழி வருகைப் பதிவு, கண்காணிப்பு காமிராக்கள் கட்டாயமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் அது இனி சாத்தியமாகாது. கைரேகை வழி வருகைப் பதிவு, கண்காணிப்பு காமிராக்கள் இல்லாமல் நிலைமையை சமாளிக்க நினைத்தால், அந்த வசதிகள் இல்லாததைக் காரணம் காட்டியே அங்கீகாரம் ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 கல்லூரிகளின் அங்கீகாரம் அவ்வாறுதான் ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் நன்றாக அறிந்ததுதான்.
அரசு நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் தமிழகம் எப்போதுமே இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. மருத்துவப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரத்திலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; பழைய முறைகளை பிடித்துக் கொண்டு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்தக்கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் உறுதி செய்யப்பட வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.