கிடுகிடுன்னு உயர்கிறது... ஒரே நாளில் 40 மாணவர்கள் சேர்க்கை: என்ன தெரியுங்களா?
பாடப்புத்தகங்கள், காலை டிபன், மதிய உணவு, சீருடை, கல்வி உதவித் தொகை, சைக்கிள் என்று பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வித்தரத்திலும் அரசு பள்ளிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன.

புதுக்கோட்டை: பரபரக்கிறது மாணவர்கள் சேர்க்கை... கிடுகிடுவென உயர்கிறது எண்ணிக்கை என புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் ஒரு ஆச்சர்யம் நடந்துள்ளது. அட ஆமாங்க. ஒரே நாளில் 40 மாணவர்கள் சேர்ந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை விளக்கி மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி, துண்டறிக்கை விநியோகம், பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் சலுகைகள் அறிவித்தல் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் மாணவ- மாணவிகள் 40 பேர் புதிதாக சேர்ந்தனர். இவர்களை மாவட்ட கலெக்டர் எம்.அருணா வரவேற்றார். மேலும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பலூன் வழங்கி, கிரீடம் அணிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, புதுக்கோட்டை போஸ் நகர் அரசு நடுநிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் நேற்று தலா 5 பேர் புதிதாக சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் மாதத்தில் தொடங்கும். அதே நேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிடும்.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியது. அந்தவகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதியே தொடங்கியது. முதல் 5 நாளிலேயே மாணவர் சேர்க்கை 34 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 995 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையின்படி பார்த்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,309 பேரும், சேலம் மாவட்டத்தில் 11,595 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டையும் பொதுமக்களிடையே எடுத்துச்சொல்லி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முயற்சி வெற்றிகரமாக மாறியுள்ளதற்கு அரசு பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையே உதாரணம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதத்திலும் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு அரசு பள்ளிகளில் 10 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்து இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாடப்புத்தகங்கள், காலை டிபன், மதிய உணவு, சீருடை, கல்வி உதவித் தொகை, சைக்கிள் என்று பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வித்தரத்திலும் அரசு பள்ளிகள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

