10th பாஸ் போதும்.. போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு வாய்ப்பு; அப்ளை பண்ணுங்க, இன்னும் ரெண்டே நாள்தான்..!
10-வது தான் தேர்ச்சி பெற்று, வேலைக்காக காத்திருப்பவர்கள் தவறவிடக்கூடாத வாய்ப்பு இது
சென்னையில் அஞ்சல் துறையின் கீழ் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்களாக பணிபுரியவேண்டும் என்று நினைத்தால் இன்னும் ஒரு நாளுக்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்ப மறந்துவிடாதீர்கள். ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அஞ்சல் துறையின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நேர்முகத்தேர்வின் மூலம் இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னை நகர வடக்குக் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்களாகப் பணிபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி மற்றும் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதோடு மட்டுமின்றி சுயதொழில் செய்பவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட தகுதியுடைய நபர்கள் அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், தங்களது சுய விவரம், தொலைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டா உள்ளிட்ட இதர விபரங்களுடன் கூடிய விண்ணப்பங்களை முதுநிலை அஞ்சல் கோட்டக்கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை – 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில், உடனடியாக இளைஞர்கள் இந்தப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
மேலும் நேரடி முகவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் சென்னை நகர வடக்கு கோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எஃப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர் நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விபரங்களை சென்னை நகர வடக்குகோட்டம் முதுநிலை அஞ்சல்கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், 044- 2827 3637 என்ற தொலைப்பேசி எண் மற்றும் sreeanrindiapost@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். எனவே, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்று நினைப்பவர்கள் மற்றும் கொரோனா காலத்தில் வேலையின்றி தவிக்கும் பல இளைஞர்கள் நாளைக்குள் அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பித்து விடுங்கள்.