மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல; மகன் ஃபெயிலானதை கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர், தனது மகன் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் மகன் தோல்வி அடைந்த நிலையில், அதைப் பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் பொதுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள், அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதை எல்லா பெற்றோரும் உணர்ந்துகொண்டால் மாணவர்களின் வாழ்வு சிறக்கும்.
இதை உணர்ந்துகொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர், தனது மகன் தனது மகன் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்ததை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
ஆறு பாடங்களிலும் தோல்வி
கர்நாடகாவின் பாகல்கோட்டில் பசவேஷ்வர் ஆங்கில வழிப் பள்ளி உள்து. இங்கு அபிஷேக் சோழச்சகுடா என்னும் மாணவர் 10ஆம் வகுப்புப் படித்து வந்தார். இவர் மொத்தம் 600-க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே (சுமார் 32%) பெற்றார். இதனால், தனது 10வது பொதுத் தேர்வில் ஆறு பாடங்களிலும் தோல்வி அடைந்தார்.
அபிஷேக்கின் நண்பர்கள் அவர் தோல்வி அடைந்ததற்காக கேலி செய்தாலும், மாணவரின் பெற்றோர் அவருக்குப் பக்கபலமாக நின்றனர். அவரைத் திட்டவோ அவமானப்படுத்தவோ இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு கேக்கை வெட்டி, சிறிய அளவில் கொண்டாட்டத்தை நடத்தினர்.
தேர்வில் தோற்று இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் இல்லை
அவரின் பெற்றோர் அபிஷேக்கிடம் கூறும்போது, "நீ தேர்வில் தோற்று இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றி பெறலாம்," என்று ஊக்கப்படுத்தினர்.
பெற்றோரின் ஆதரவு கண்டு நெகிழ்ந்த அபிஷேக் கூறும்போது, ’’நான் தேர்வில் ஃபெயில் ஆனபோதும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தினர். நான் மீண்டும் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்’’ என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநிலப் பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.






















