Omicron Spread India: தமிழ்நாடு முதல் டெல்லி வரை - மீண்டும் பள்ளிகளை மூடும் மாநிலங்களின் பட்டியல்!
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 2,34,175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனா மூன்றாவது அலை உருவாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கையாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு, மற்ற வகுப்புகள் செயல்பட தடை விதித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. தற்போது, எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்ததை தொடர்ந்து, 1 முதல் 8 ஆம் வகுப்புகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்புகள் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அரியானா:
அரியானாவில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வந்ததை தொடர்ந்து, ஜனவரி 12ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
ஒடிசா:
ஒடிசாவில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஒமிக்ரானால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் கூறியுள்ளார். 6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி:
டெல்லி கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பை பொறுத்து பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், கொரோனா அதிகரிப்பால் மும்பை மாநகராட்சியில் 1 - 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்றும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கர்நாடகா:
கர்நாடகாவில் ஜனவரி 15ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் பொறுத்து பள்ளிகள் திறப்பு, தேர்வுகள் ரத்து குறித்து அறிவிக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை கூறியுள்ளது.
15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியா முழுவதும் இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 2,34,175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்