Public Exam: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள்: என்னென்ன பரிந்துரைகள்? - விவரம்
10 கி.மீ. தூரம் பயணித்து மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் நிலையில் பரிந்துரைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, 10 கி.மீ. தூரம் பயணித்து மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக அக்டோபர் 27-ம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டில் (2022-2023) மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்குரிய புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து நடப்பு கல்வியாண்டு 2022-2023 மேல்நிலை பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலனை செய்து, கருத்துருவினை அனுப்புதல் வேண்டும்.
மேலும், 2022 மேல்நிலைத் தேர்விற்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடாந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டும் எனில் (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை /நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்) மீண்டும் கருத்துரு அனுப்பி, இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. எக்காரணங் கொண்டும் கருத்துருவினை பழைய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்புதல் கூடாது.
சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி பரிந்துரைத்து அனுப்புதல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவிற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் இத்துடன் இணைத்தனுப்பப்படும் அரசாணையில் உள்ள விதிகளின்படி தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை, உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளைத் தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்குப் பரிந்தரை செய்யப்படும் என அறிவிக்கலாகிறது. 10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களையும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் 27.10.2022 அன்று காலை 10.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.