NEET UG SC Verdict: போதிய ஆதாரங்கள் இல்லை; நீட் மறுதேர்வு நடத்தப்படாது- உச்ச நீதிமன்றம் உத்தரவு
மனிதத் தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. நீட் மறுதேர்வு நடத்தப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்
2024 இளநிலை நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யும் அளவிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்றும் நீட் மறு தேர்வு நடத்தப்படாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் நீட் முறைகேடு வழக்கு
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜர் ஆகி வாதாடி வருகிறார்.
இதற்கிடையே மிகவும் தீவிரமான பிரச்சினையாக நீட் முறைகேடு மாறிய நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ, 6 விசாரணை அறிக்கைகளைத் தாக்கல் செய்தது.
லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்
இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு விட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. நீட் மறுதேர்வு நடத்தப்பட்டால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது அல்ல. நீட் தேர்வு முழுவதிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கருணை மதிப்பெண்களால் பாதிப்பட்டிருந்தால் அருகிலுள்ள நீதிமன்றங்களை நாடலாம்.
ஹசாரிபாக், பாட்னா ஆகிய இடங்களில் சுமார் 155 தேர்வர்கள் பயன் அடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. அதற்காக மொத்தமாக 23 லட்சம் பேர் எழுதிய தேர்வை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு செய்வதால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு ஏற்படும்'' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4ஆவது ஆப்ஷன்தான் சரியான விடை
முன்னதாக காலையில், நீட் இளநிலைத் தேர்வில் கதிரியக்கத் தனிமங்கள் குறித்த சர்ச்சைக்குரிய 19ஆம் கேள்விக்கு 4ஆவது ஆப்ஷன்தான் சரியான விடை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் பானர்ஜி 3 பேர் கொண்ட இயற்பியல் பேராசிரியர்கள் குழுவை நியமித்து, இந்த விடையைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.