NEET Result 2023 Topper: நீட் தேர்வில் மாஸ் காட்டிய தமிழ்நாடு.. டாப் 10 லிஸ்டில் 4 தமிழ் மாணவர்கள்...!
NEET Result 2023 Topper: இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் 99.9999019% மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர 2023-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் பத்து இடங்களில் 4 இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.
நீட் தகுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் 99.9999019% மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவருடன் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்யும் முதலிடம் பிடித்துள்ளார்.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர்.
இதையடுத்து நீட் தேர்வு மே 7ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை 499 நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். இதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 1.44 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களில் நான்கு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 99.9999019 சதவீதம் எடுத்து முதலிடம். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
அதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த கவுஸ்தவ் பவுரி - 716 மதிப்பெண்கள், சூர்யா சித்தார்த் - 715 மதிப்பெண்கள், வருண் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முறையே 3, 6 மற்றும் 9-வது இடங்களை இவர்கள் பிடித்துள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகளை காண..
- https://neet.nta.nic.in/
- https://ntaresults.nic.in/NTARESULTS_CMS/Page/Page?PageId=6&LangId=P
- https://www.nta.ac.in/
ஆகிய இணையதளங்கள் வாயிலாக நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் கணக்கீடு
நீட் தேர்வு எழுதியவர்களின் ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாட விடை ஒவ்வொன்றுக்கும் 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. சரிபார்ப்பது எப்படி?
* neet.nta.nic.in என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* முகப்புப் பக்கத்தில் NEET UG 2023 result என்ற இணைப்பை க்ளிக் செய்க.
* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும்.
* NEET UG 2023 result எனப்படும் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
* மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.