NEET UG result: என்னாது… நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையா?- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
NEET UG result 2025: வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மருத்துவ ஆணையம், தேசியத் தேர்வுகள் முகமை, மத்திய அரசு ஆகியவை, இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மே 4ஆம் தேதி நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
என்ன நடந்தது?
நாடு முழுவதும் மே 4ஆம் தேதி அகில இந்திய அளவில், மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே மே 4ஆம் தேதி பல்வேறு இடங்களில் மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையில் ஆவடி, பள்ளிக் கரணை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நீட் தேர்வு மையங்களில், மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டது.
ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மின் தடை
ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் பிற்பகல் 3 மணி முதல் 4.15 மணி வரை தேர்வு அறையில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிப்புக்கு ஆளானதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மருத்துவ ஆணையம், தேசியத் தேர்வுகள் முகமை, மத்திய அரசு ஆகியவை, இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை
அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக மத்தியப் பிரதேசத்திலும் மின் தடை காரணமாக தேர்வு எழுதப் பிரச்சினை ஏற்பட்டதால், தேர்வுக்குத் தடை கோரி தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






















