NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Re NEET Result Date 2026: ஜூலை 20ஆம் தேதி நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் இளங்கலை மறு தேர்வு முடிவுகள் ஜூலை 20ஆம் தேதி வெளியாகும் என்று என்டிஏ தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வு
முன்னதாக மே 3ஆம் தேதி நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததாக செய்தி வெளியான நிலையில், அது உறுதி செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக தேர்வே ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. சுமார் 20 லட்சம் மாணவ- மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். தொடர்ந்து ஜூன் 25ஆம் தேதி தற்காலிக விடைக் குறிப்பு வெளியானது.
ஆட்சேபிக்க ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் ஆட்சேபனைகள் இதில் பெறப்பட்டன. இந்த நிலையில், இதுகுறித்த மதிப்பீடு நடைபெற்று இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது.
ஜூலை 20ஆம் தேதி நீட் மறுதேர்வு முடிவுகள்
இதைத் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் கூடாது என்ற நோக்கில், தேசியத் தேர்வுகள் முகமை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மருத்துவ கலந்தாய்வுக் குழு தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையைத் தொடங்கும். மாநில ஒதுக்கீட்டின்கீழ் அந்தந்த மாநில அரசுகள், மாணவ சேர்க்கைப் பணியை நடத்தும்.
தமிழ்நாட்டில் தொடங்கிய விண்ணப்ப பதிவு
ஏற்கெனவே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்























