NEET UG 2023: பரபரப்பு.. நாளை நடைபெற இருந்த நீட் தேர்வு இந்த மாநிலத்தில் ஒத்திவைப்பு; என்ன காரணம்?
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறையால் நாளை அங்கு நடைபெற இருந்த நீட் இளநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறையால் நாளை அங்கு நடைபெற இருந்த நீட் இளநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மெய்டீஸ் சமூகத்தினர், இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. மணிப்பூரிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட ஆண்டுகளாக போராடி வருகின்றனர் என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
54 பேர் பலி
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்ததால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் இருந்து 8,751 மாணவர்கள் 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வை எழுதுவதாக இருந்தது. நாடு முழுவதும் நாளை நீட் இளநிலைத் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் மணிப்பூரில் தொடரும் வன்முறையால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாநிலத்தில் இருந்து குரல்கள் எழுந்தன.
நீட் தேர்வு ஒத்திவைப்பு
இதுகுறித்து மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ராஜ்குமார் ரஞ்சன் சிங், நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், அங்கு நடைபெற இருந்த நீட் இளநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தேர்வுகள் முகமை எழுதிய பதில் கடிதத்தில், ''மணிப்பூரில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத இருந்த மாணவர்களின் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு போன் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.