NEET UG 2022: “நீட் தேர்வை ஒத்தி வைங்க” - 10 ஆயிரம் தேர்வர்கள் என்டிஏவுக்குக் கடிதம் - காரணம் என்ன?
2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்.சி. உள்ளிட்ட சில துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"கடந்த கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வே இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் இருந்து நீட் தேர்வுக்குத் தயாரானோர் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான மாப் -அப் கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தைப் பெறக் காத்திருக்கின்றனர். ஏப்ரல் முதல் வாரத்தில் மாப் - அப் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், எந்த இடமும் கிடைக்கவில்லை.
ஏராளமான மாநிலங்களில் மாநிலக் கலந்தாய்வு இன்னும் முடிவடையவில்லை. 2021ஆம் ஆண்டுக்கான நீட் கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், நிறைய மாணவர்களால் தங்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு சதவீதம் குறித்துக் கணக்கிட முடியவில்லை. அடுத்த 3 நாட்களிலேயே அதாவது ஏப்ரல் 6ஆம் தேதியே, 2022 ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் 2022 தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்த்து.
இதனால் நீட் தேர்வை ஏற்கெனவே எழுதியவர்களும் புதிதாக எழுத உள்ளவர்களும் 2022 நீட் தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் இருக்காது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா 2ஆவது அலை காரணமாகத் தேர்வு தள்ளிப் போனது. அதனால் இந்த முறையும் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும்.
அதேபோல க்யூட் தேர்வு ஜூலை முதல் மற்றும் 2ஆவது வாரங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இவை அனைத்துக்கும் இடையில் நீட் தேர்வுக்குத் தயாராவது மாணவர்களுக்குக் கடினமான சூழலை ஏற்படுத்தும்.
எம்பிபிஎஸ் படிப்பது என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாகவும் பெற்றோர்களின் உணர்வாகவும் உள்ளது. ஆசிரியர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். எனினும் உரிய காலம் இல்லாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் கனவை விட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது.
இதனால் போதிய கால அவகாசம் கொடுத்துத் தேர்வை நடத்தினால், மாணவர்களால் நீட் தேர்வுக்கு சிறப்பாகத் தயாராக முடியும்".
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதுகலை நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்