NEET PG Exam 2022 Postponed: மார்ச் 12 இல் நடைபெற இருந்த முதுகலை நீட் தேர்வு 8 வாரங்களுக்கு தள்ளி வைப்பு
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை 8 வாரங்களுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை நீட் தேர்வு முடிந்து தற்போது மருத்துவ கல்லூரியில் சேர மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் தேர்வை 6-8 வாரங்களுக்கு தள்ளிவைத்து மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு சற்று தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
Union Health Ministry postpones NEET PG exam 2022 by 6-8 weeks
— ANI (@ANI) February 4, 2022
The exam was scheduled to be held on March 12 pic.twitter.com/MPpisjbvvx
முன்னதாக இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான 27% மற்றும் முற்பட்டசாதியினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு ஜூலை 29ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி நீட் மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பில் சில இடைக்கால உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முற்பட்டசாதியில் பொருளாதாரத்தில் நலிந்த வகுப்புகளுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தலாம். இதை 2021-22 ஆண்டு நீட் மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தலாம்.அதேபோல் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு முற்பட்டசாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களை தீர்மானிக்க 8 லட்சம் ரூபாய் என்று வரையறுக்கப்பட்டத்தை பின்பற்றலாம். இந்த வரையறை தொடர்பாக வரும் மார்ச் மாதம் மீண்டும் விசாரிக்கப்படும். அதுவரை மாணவர்களின் நலன் கருதி இதை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 2021 முதுகலை நீட் தேர்விற்கு பின்பு இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில் மத்திய அரசு சார்பில் முற்பட்ட சாதியினருக்கான 8 லட்சம் ரூபாய் என்ற வரையறையை மீண்டும் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது. அதன்பின்னர் இதை செய்ய பாண்டே தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்த குழு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு வரையறையை 8 லட்சம் ரூபாய் என்றே தொடரலாம் என்று தெரிவித்திருந்தது. அவர்களின் பரிந்துரைக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில் அனைவரின் வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தங்களுடைய தீர்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உள்ளங்கையில் அரசுப் பணி 6: தமிழ் இலக்கியம்...முக்கியத்துவமும் வெல்லும் வழிமுறைகளும்!