TN 12th results Nandhini: 'தங்கை நந்தினிக்கு தங்கப் பேனா..' வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்
தான் பெற்ற தங்கப் பேனாவை பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவி நந்தினிக்குப் பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தான் பெற்ற தங்கப் பேனாவை பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவி நந்தினிக்குப் பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனை படைத்தார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் மாநிலத்திலேயே முதலிடமும் பெற்றார்.
மாணவி நந்தினி எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்தவர். மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, பிற ஆசிரியர்கள் மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்தனர் என்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைவரும் ஊக்கமளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இவரின் சாதனைகளைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். இத்துடன் மாணவி நந்தினி, முதலமைச்சரை ஆழ்வார்ப்பேட்டையில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த நிலையில், தான் பெற்ற தங்கப் பேனாவை பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவி நந்தினிக்குப் பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஒரு
— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது
எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண் குலத்தின் பெருமை சொல்கிறது எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான் பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன் உன் கனவு மெய்ப்பட வேண்டும் பெண்ணே!’’ என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.
மாணவி நந்தினி நெகிழ்ச்சிப் பேட்டி
சாதனை படைத்தது குறித்துப் பேசிய மாணவி நந்தினி, ’’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதில் பெருமையாக உள்ளது. பள்ளி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறேன்.
என் அப்பா கூலித் தொழிலாளிதான். ஆனால் படிக்க வைக்க முடியாது என்றோ, படிக்கக் காசில்லை என்று எப்போதுமே சொன்னதில்லை. என்ன விரும்புகிறோயோ அதைச் செய் என்றுதான் கூறுவார். என் அப்பாவின் உழைப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். அவர் என்னைப் படிக்க வைக்கவில்லை என்றால், இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன்’’ என்று மாணவி நந்தினி நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார்.