Namma School Thittam: கைம்மாறு செய்ய வேண்டாமா? அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
அரசுப் பள்ளிகளுக்கு நம்ம ஸ்கூல் திட்டம் வாயிலாக உதவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![Namma School Thittam: கைம்மாறு செய்ய வேண்டாமா? அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் Namma School Thittam Chief Secretary Irai Anbu Appeal to Government Servants Help Government Schools Namma School Thittam: கைம்மாறு செய்ய வேண்டாமா? அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/24/ad724496f30619738c1e82b6e849babb1679646377243332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசுப் பள்ளிகளுக்கு நம்ம ஸ்கூல் திட்டம் வாயிலாக உதவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி உள்ளதாவது:
’’அரசுப் பணியெனும் அரிய வாய்ப்பைப் பெற்று பணியாற்றும் தோழர்களே,
நம்மில் பலரும் அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவிபெறும் பள்ளிகளிலோ நடைபயின்று வளர்ந்தவர்கள். நம்மை, அந்தப் பள்ளிகள் கைப்பிடித்து அழைத்துச் சென்று வாழ்க்கையின் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தன. இயற்கையை நேசிக்கவும், இருத்தலை ரசிக்கவும், எளியவர்களை மதிக்கவும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தம்மை அறியாமலேயே கற்றுக்கொள்கிறார்கள்.
அங்கு மனத்தில் மலர் தூவுவதைப்போல கல்வியின் ரசவாதம் நடந்துவிடுகிறது. விளையாடிக்கொண்டே படித்தோம்; பொழுதுபோக்கைப்போல கல்வி புகட்டப்பட்டது. அன்று கற்றவற்றை இன்றும் மூளை வடிகட்டி வைத்திருக்கிறது.
பள்ளி என்பது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல; அவை நம் குழந்தைப் பருவத்தின் அழியாத சுவர் ஓவியங்கள்; அவை நெஞ்சை அகலா நினைவுகள். அந்தப் பள்ளிகளை நினைக்கும்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக இருந்த நினைவுகளும் மனத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். நம் குழந்தைத்தனம் திருடப்படாமல்
காப்பாற்றப்பட்டதற்கு நாம் படித்த பள்ளிகளும் காரணம்.
கைம்மாறு செய்யவேண்டியது நம் கடமை
நம்மை உருவாக்கிய அரசுப் பள்ளிகளுக்கு கைம்மாறு செய்யவேண்டியது நம் கடமை. அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஓர் இணைய தாழ்வாரத்தின்மூலம் ஒன்றிணைக்கும் முயற்சி உன்னதமாக இருக்கும் என்று கல்வித்துறை கருதுகிறது. மரங்கள் கூட மலர்களை வேர்களில் உதிர்த்து காணிக்கை ஆக்குகின்றன. நம்மை ஆளாக்கிய பள்ளிக்கு நாமும் ஏதேனும் செய்யவேண்டுமென்கின்ற கடப்பாட்டோடு சிந்திப்பதற்கே இந்தத் தாழ்வாரம். பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படவும், பலப்படவும் இந்த முன்னாள் மாணவர்கள் குழு நேசக்கரம் நீட்டும். தேவைப்படுகிறபோது, அக்குழுவின் கூட்டத்தில் அவர்கள் ஒப்புதலோடு பங்களிப்பு செய்யும்.
முன்னாள் மாணவர்கள்:
ஆண்டுதோறும் பள்ளிகளில் எத்தனையோ விழாக்கள் மாணவர்கள் திறமையை ஒளிரச் செய்யவும், அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் ஆழ்குழாய்க் கிணறுபோல செயலாற்றவும், இந்த விழாக்களே அச்சாணிகள். அந்த விழாக்களில் முன்னாள் மாணவர்கள் எந்நாளும் பங்கேற்கலாம். இப்போது படிக்கும் மாணவர்களில் சிலருக்கு பொருளாதாரத்தில் சிக்கல்கள் இருந்தால் அவற்றைக் களைய உதவிபுரியலாம்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19 ஆம் நாளன்று முதலமைச்சரால் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் இணையதளத்தில் இதற்கான படிவம் உள்ளது.
https://nammaschools.tnschools.gov.in என்ற சுட்டியைப் பயன்படுத்தி உள்ளே சென்று 'முன்னாள் மாணவர்-பதிவு செய்ய' என்கிற பொத்தானை அழுத்தினால் படிவத்தைப் பெறலாம். அதில் அனைத்துத் தகவல்களையும் தரவேண்டுமென்பதில்லை. விரும்பினால் வாட்ஸ்-ஆப்பில், பணியாற்றும் துறை, புகைப்படம், முகவரி போன்றவற்றை அளிக்கலாம்.
ஆயிரம் இதயங்கள் மகிழும்:
அச்சுட்டியில் நாம் படித்த பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களையும் இந்தக் குழுவில் இணைத்துக்கொள்ள அழைப்புவிடுக்கும் அமைப்பும் உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒருவர் ஒரே அலைவரிசையில் இருக்கும் வகுப்பு நண்பர்களையும், பள்ளியில் பயின்ற நண்பர்களையும் குழுவில் இணைக்கலாம்.
முதலில் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள வட்டாரங்களின் பட்டியல் வரும். அதிலிருந்து குறிப்பிட்ட வட்டாரத்தைத் தேர்வு செய்தால், பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் வரும். அதிலிருந்து ஒருவர் தான் பயின்ற பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம்.
நாம் பயின்ற பள்ளியில் நாம் மட்டும் பங்கேற்பதோடு, ஓர் அகல் விளக்கைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றுவதைப்போல, நம் முன்னெடுப்பை மையமாக்கி, பலருடைய உதவிகளையும் பெற்று, பள்ளியில் ஆயிரம் இதயங்கள் மகிழ வழிவகுக்கலாம்.
அரசப்பள்ளிகளாக மாறும்:
இணையதளத்தில் நம் பள்ளி இப்போது எப்படியிருக்கிறது என்பதை மெய்நிகர் சிற்றுலா மூலமாக உலகின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் காணலாம். நம் பள்ளி முதலில் எப்படியிருந்தது, நாம் பங்களிப்பு செய்த பிறகு, அதன்மூலம் உருவான திட்டங்களினால் எப்படியிருக்கிறது என அனைத்தையும் மந்திரக் கண்ணாடிபோலக் காட்டும் திறன்மிகுந்ததாக அந்த இணையதளம் இருக்கிறது. வெளிப்படைத் தன்மையே இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
ஒரு மரம்கூட ஆயிரம் விதைகளை ஆண்டுதோறும் மண்ணின்மீது தூவிக்கொண்டேயிருக்கிறது. தொடர்ந்த முயற்சியே உச்சியை அடைவதற்கான உந்து சக்தி.
நாம் அனைவரும் இணைந்தால் தமிழ்நாட்டிவிருக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் அரசப் பள்ளிகளாக மாறி, கல்வியிலும், கலைகளிலும் திறன்களிலும் அழகிலும் சுற்றுச்சூழலிலும் அமைதியிலும் உலகிற்கே ஒளிகாட்டும் தீப்பந்தங்களாகத் திகழும்.’’
இவ்வாறு தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)