விழுப்புரம்: Smart Class Room-ஐ திறந்து வைத்து வகுப்பறையில் பாடம் கவனித்த அமைச்சர் பொன்முடி
மாணவர்கள் நீங்கள் அனைவரும் அரசால் வழங்கப்படும் திட்டங்களை பெற்று தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
விழுப்புரம்: உயர்கல்வித்துறை அமைச்சர்.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, அவர்கள் தலைமையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பென்னைவலம் ஊராட்சி, அமாவாசைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் பயன்பாட்டிற்கு மெய்நிகர் வகுப்பறை (Smart Class Room) திறந்து வைத்தும் மற்றும் இருக்கைகளை வழங்கினார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனது இரு கண்களில் ஒரு கண்ணாக கல்வித்துறையினை பார்க்கிறேன் என எப்பொழுதும் தெரிவிப்பது உண்டு, கண்களை காப்பது போலவே, தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி பெற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்வித்துறையின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், அனைத்து பள்ளிக்கட்டிடம் நல்ல முறையில் இருந்திட வேண்டும். கிராமப்புறங்களில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்திட வேண்டும்.
பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்களுக்கு தேவையான நிதியினையும் ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பென்னைவலம் ஊராட்சி, அமாவாசைபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பொதுமக்கள் பங்குத்தொகை ரூ.29,000/-மும் அரசு பங்குத் தொகை ரூ.57,740/- என மொத்தம் ரூ.86,740/- மதிப்பீட்டில் 10 எண்ணிக்கையிலான மூன்று நபர்கள் அமரக்கூடிய இருக்கைகளும், பொதுமக்கள் பங்குத்தொகையாக ரூ.61,000/-மும் அரசு பங்குத்தொகையாக ரூ.1,21,500/- என மொத்தம் ரூ.1,82,500/- மதிப்பீட்டில் 75 inch Smart Board என மொத்தம் ரூ.2,69,240/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், கொரோனா காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியினை போக்கிடும் வகையில், ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தினை செயல்படுத்தினார்கள். மேலும், பள்ளிக்குழந்தைகள் ஆரோக்கியமாக கல்வி பயின்றிடும் வகையில், ‘முதலமைச்சரின் காலை உணவு” திட்டம், பெண்கள் தொடர்ந்து கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் ‘புதுமைப்பெண்” திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை, கிராமப்புற மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், ‘நம்ம ஸ்கூல் - நம்ம ஊர் பள்ளி” திட்டத்தின் மூலம், அரசின் நிதியுதவியுடன், பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மூலம் தேவையான நிதியுதவி பெறப்பட்டு பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் போன்றவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அனைத்துத்துறைகளின் வளர்ச்சி காண வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என கூறுவார்கள்.
எனவே, மாணவர்கள் நீங்கள் அனைவரும் அரசால் வழங்கப்படும் திட்டங்களை பெற்று தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே நாம் வாழ்வின் வெற்றிக்கு முதல் அடித்தளமாகும். ஆகையால் மாணவச் செல்வங்கள் அனைவரும் சிறப்பான முறையில் கல்வி பயின்று உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளி வகுப்பறையில் சிறப்பாக பதில் கூறிய மாணவியை பாராட்டி புத்தகங்களை அமைச்சர் பொன்முடி அவர்கள் வழங்கினார்