Minister Anbil Mahesh: கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ’’கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம். இதுகுறித்து தலைமைச் செயலாளர் மூலம் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தி விட்டோம். எஸ்எஸ்ஏ திட்டத்துக்கான நிதியைத்தான் கேட்கிறோம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்க்கச் சொல்லவில்லை’’ என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பள்ளி கட்டமைப்பு சரியும் நிலை
எஸ்எஸ்ஏ எனப்படும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த பள்ளி கட்டமைப்பும் சரியும் நிலை உருவாகும் என்று ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு நிபந்தனைகளுடன் இணைவதாகத் தெரிவித்ததால், மத்திய அரசு இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மறைமுக நோக்கம் என்ன?
மேலும் பேசிய அவர், ’’இதுகுறித்து முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். உங்களின் (மத்திய அரசு) மறைமுக நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள, எங்கள் குழுவின் பரிந்துரை அவசியம்.
குழு ஒப்புக்கொள்ளவில்லை என்ற சூழலில், நாங்களும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகே மத்தியக் கல்வி அமைச்சரைச் சந்தித்தோம். எஸ்எஸ்ஏ திட்டத்துக்கான நிதியைத்தான் கேட்கிறோம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்க்கச் சொல்லவில்லை’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு அமைச்சர் சவால்
தமிழக பாடத்திட்டம் மோசமானது என்று ஆளுநர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ’’6 முதல் 12ஆம் வகுப்பு வரை 12ஆம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர்? எவ்வளவு பேர் அடுத்தகட்டத்துக்குச் செல்கிறார்கள்?
சிபிஎஸ்இ பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது நம்முடைய பாடத்திட்டம் எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டும். அதுகுறித்து ஒரு குழு அமைத்து பார்த்துவிட்டு, ஆளுநர் பேசட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.