MBBS BDS Admission 2022: மருத்துவப் படிப்புகளுக்கு செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?- முழு விவரம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மாணவர்கள் இணையதளம் மூலமாக அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
மாணவர்கள் https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு செப்.22 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்https://t.co/wupaoCzH82 | #MBBS #medicalcourses #tngovt #Medicalcounselling #abp #abpnadu #abpnews pic.twitter.com/TP4K8ur1Hn
— ABP Nadu (@abpnadu) September 20, 2022
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnhealth.tn.gov.in/
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவு கடந்த 7ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த ஆண்டு கலந்தாய்வில், மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும். கல்விக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்.
வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற கலந்தாய்வு
சமீபத்தில் நடந்து முடிந்த டாக்டர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றதாகவும், இடமாறுதல் பெற்றவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்துவிட்டதாகவும், அவர்களின் முழு விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்து இருந்தார்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள 270 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 41 ஆயிரம் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 5,300 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன.
நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 99,610 பேர் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர். அதாவது 2021-ல் 57.43 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்த நிலையில் 2022-ல் 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு 1,32,167 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.