Mahavishnu Speech: ஆன்மிகம் பேசினால் இந்துத்துவ முத்திரையா? மாணவர்களிடம் நாத்திகத் திணிப்பு ஏன்? அர்ஜூன் சம்பத் கேள்வி
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நாகரீகத்துடன் யார் மனதும் காயம் படாதபடி சிறப்பாக இந்த விஷயத்தை கையாண்டு உள்ளார்.
ஆன்மிகம் பேசினால் இந்துத்துவ முத்திரை குத்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மாணவர்களிடம் நாத்திக கருத்துக்கள் திணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பேச அழைக்கப்பட்ட மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கேள்விகள் கேட்டு இடைமறித்து விவாதங்கள் செய்துள்ளார். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நாகரீகத்துடன் யார் மனதும் காயம் படாதபடி சிறப்பாக இந்த விஷயத்தை கையாண்டு உள்ளார்.
ஆனால் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, குழப்பம் ஏற்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவரையும் இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இது தவறான அணுகுமுறை.
ஆசிரியர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள திராவிடர் கழக, கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவு விஞ்ஞானம் என்கிற போர்வையில் ஆன்மீக கருத்துக்களை பேசுவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்ற சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் திராவிட நாத்திக கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன.
பிற மதப் பிரச்சாரங்கள் மட்டும் ஏன்?
அரசு உதவி பெறும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் நேரடியாக பைபிள் பிரச்சாரம், அதேபோல முஸ்லிம் மதரஸா பள்ளிகளில் அவர்களுடைய மதப் பிரச்சாரம் நடக்கிறது. மதச்சார்பற்ற அரசாங்கத்தினுடைய உதவியோடு வெளிப்படையாக பிற மதப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறபொழுது ஆன்மீகத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு கூட அரசுப் பள்ளிகளில் தடை விதிக்கிற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்துக்கள், தமிழர்கள் தங்களது மெய்யியலைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே கொடுக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடைபெறுவது இல்லை.
மத்திய அரசு கல்விக் கொள்கையாக இருந்தாலும் மாநில அரசு கல்விக் கொள்கையாக இருந்தாலும் நீதி போதனை வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழர்களின் நெகிழியியல் ஆன்மீகம் பேசினால்கூட அதற்கும் இந்துத்துவ முத்திரை குத்தி தடை ஏற்படுத்துகிறார்கள். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துத் திணிப்பாளர்களை வெளியேற்றுக
குழப்பம் ஏற்படுத்திய ஆசிரியர் மாற்றுத்திறனாளி என்கிற காரணத்தினால் அவர் மீது அனுதாபம் உள்ளது. ஆனால் அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த குழப்பத்தை ஏற்படுத்தி கல்வித் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் ஊடுருவியுள்ள கிறிஸ்தவ, திராவிட கழக, கம்யூனிஸ்ட் கருத்துத் திணிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தினுடைய கல்வித்தரம் உயரும்.
ஓய்வு பெற்ற நீதிபதி, கம்யூனிஸ்ட் ஆதரவாளர் சந்துரு கொடுத்த பரிந்துரைகளில் இந்துக்களின் தமிழர் சமய அடையாளங்களை மட்டும் நீக்கிட வேண்டும். முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்து தமிழர்களின் ஆன்மீகம் ஒடுக்கம்
இதே போல இந்து சமய அறநிலையத்துறை நடத்திய அனைத்துலாக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு நிகழ்ச்சிக்கும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து இந்து தமிழர்களின் ஆன்மீகம் ஒடுக்கப்படுவது வேதனையை அளிக்கிறது.
வெளிப்படையாக இந்து ஆன்மீகத்தை எதிர்க்கின்ற சுபவீ, மனுஷ்ய புத்திரன், திண்டுக்கல் லியோனி, உள்ளிட்டோருக்கு கல்வித் துறை பாடநூல் வடிவமைப்பு ஆகியவற்றில் பதவிகள் கொடுத்து ஆளும் திராவிட மாடல் அரசு துணையாக இருப்பதும் கண்கூடாக தெரிகிறது. நாத்திக, கம்யூனிச, தமிழர் விரோத கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் திணிக்கும் இவர்களை கல்வித் துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும்’’.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.