Minister Ponmudi: மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு- காரணம் இதுதான்!
Madurai Kamaraj University Convocation: மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்க அனுமதி மறுக்கும் ஆளுநரைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானவே கொண்டு வந்தார். இருந்தாலும், ஆளுநர் தொடர்ந்து சமூக நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்கும் விவகாரத்தில் மீண்டும் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கு ஒரு பிரச்னை எழுந்தது. இதில் ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
’’சுதந்திரப் போராட்ட வீரருக்கு உண்மையிலேயே மரியாதை செலுத்தும் எண்ணம் ஆளுநருக்கு இருந்தால், அனுமதி மறுப்பது ஏன்? ஆர்எஸ்எஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் மதிப்பு தெரியாது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்க ஆளுநர் அனுமதி மறுப்பது ஏன்? சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் பட்டத்தை முதன்முதலில் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார். விருதுடன் வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்தைக் கூட வைத்துக்கொள்ளாமல், அரசுக்கே திருப்பி வழங்கிவிட்டார். அதுதான் பெரிய மனிதருக்கு அழகு.
ஆளுநர் பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார். கடந்த சில பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்னைப் பேச விடாமல் தடுத்தார்.’’
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.