College Best Campus: இந்தியாவில் புகழ்பெற்ற வளாக வசதிகொண்ட கல்லூரிகள் இத்தனையா? இதோ பட்டியல்!
நாடு முழுவதும் சிறப்பான வளாக வசதி கொண்ட கல்லூரிகளின் பட்டியலை இங்கு காணலாம்.
நம் எல்லோருக்குமே வாழ்க்கையின் மறக்க முடியாத காலகட்டமாக கல்லூரிப் பருவம் இருக்கும். கூட்டுக்குள் இருந்து வெளியே சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் பருவமே கல்லூரிப் பருவம். அப்போதுதான் ஒவ்வொருவரும் கற்கவும், புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் வருங்காலத்தை வடித்தெடுக்கவும் ஆரம்பிக்கிறோம்.
கல்வியோடு கேளிக்கைக்கும் இடம் கொடுத்தாக வேண்டிய இந்த காலகட்டத்தில், ஒரு கல்லூரியின் வளாகம் எப்படிப்பட்ட கட்டமைப்புகளுடன் இருக்கிறது, அங்குள்ள வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் முக்கியம் ஆகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் சிறப்பான வளாக வசதி கொண்ட கல்லூரிகளின் பட்டியலை இங்கு காணலாம்.
ஐஐடி காரக்பூர்
இந்தியாவிலேயே புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்று ஐஐடி காரக்பூர். சுமார் 2,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில், எக்கச்சக்கமான வசதிகள் குவிந்து கிடக்கின்றன. நீச்சல் குளம், ஜிம், கோல்ஃப் மைதானம் ஆகியவை இங்கு பிரபலம். 3.5 லட்சம் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களுடன் மிகப் பெரிய மத்திய நூலகம் இங்கு அமைந்துள்ளது.
ஸ்விஸ் கட்டிடக் கலைஞர்கள் இந்த கல்லூரி கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். ஆண்டு முழுவதும் ஐஐடி காரக்பூரில் கலை மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கும் என்பதால், இங்கு ஆட்டம் பாட்டத்துக்கும் அறிவு கற்றலுக்கும் பஞ்சமே இருக்காது.
கிறிஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூரு
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழககங்களில் கிறிஸ்ட் பல்கலைக்கழகமும் ஒன்று. இது பெங்களூருவில் அமைந்துள்ளது. சிறப்பான கல்வியை வழங்குவதற்காகப் புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகம், துள்ளலான வளாக வாழ்க்கைக்கும் பெயர் போனது. ஏராளமான மாணவர் மன்றங்கள், இசை, விளையாட்டு மன்றங்கள், நாடக அரங்கங்கள் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் 300-க்கும் மேற்பட்ட நூல்கள் சொந்தமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஐஐடி சென்னை
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 617 ஏக்கரில் அமைந்துள்ளது ஐஐடி சென்னை வளாகம். உங்களுக்கு இயற்கை மற்றும் வன விலங்குகள் பிடிக்குமென்றால், கண்ணை மூடிக்கொண்டு ஐஐடி சென்னைக்கு வந்து விடலாம். விலங்குகள் மட்டுமல்ல, பறவைகளுக்கும் ஐஐடி சென்னை வளாகம் புகலிடமாக இருக்கிறது. கிண்டி தேசியப் பூங்கா அருகிலேயே ஐஐடி அமைந்துள்ளது.
இங்கு நடத்தப்படும் சாரங் (Saarang) தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற மாநில மாணவர்கள் மத்தியிலும் பிரபலமான கலை விழாவாக இருக்கிறது. மொத்தம் 5 நாட்களுக்கு இந்த விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
பிட்ஸ் பிலானி, கோவா
கோவா என்றாலே கொண்டாட்டம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தின் (பிட்ஸ் பிலானி) கோவா வளாகம் குன்றுகள், காடுகள், பசுமை, அழகான சாலைகள் மற்றும் ஜுவாரி நதியால் சூழப்பட்டுள்ளது. இவை இந்த வளாகத்தின் அழகை மென்மேலும் கூட்டுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பிலானி வளாகத்தில் கொண்டாடப்படும் ஒயாசிஸ் என்னும் கலை விழாவும் மாணவர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்.
Symbiosis, புனே
பார்ட்டி கலாச்சாரத்தைப் பற்றிப் பேசினோமால், சிம்பியோசிஸ் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ரிசார்ட்டுகளைப் போல இதன் வளாகம் அமைந்துள்ளது. சிம்பியோசிஸ் வணிக மேலாண்மை நிறுவனம், இந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற மேலாண்மை வணிகக் கல்வி நிறுவனங்களில் ஒன்று.
இந்த நிறுவனம் அதன் அதி நவீன உள்கட்டமைப்புக்காகவும் அனுபவ கற்றலுக்காகவும் பெயர் பெற்றது. இங்கு ஏராளமான கலை, விளையாட்டு, தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
நிஃப்ட், டெல்லி
டெல்லியில் அமைந்துள்ள நிஃப்ட் எனப்படும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Fashion Technology), இந்தியாவின் முதன்மையான ஃபேஷன் நிறுவனங்களில் ஒன்று. உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதி மற்றும் அவற்றின் கிரியேட்டிவிட்டி ஆகியவற்றால், நிஃப்ட் புகழ் பெற்றுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஃபேஷன் ஷோவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஃபேஷன் பிரியர்கள் கலந்துகொள்வர். இதுதாண்டி ஏராளமான கலை விழாக்கள் இங்கு ஆண்டு முழுவதும் நடைபெறும்.
எஸ்எஸ்என் கல்லூரி, சென்னை
தமிழ்நாட்டில் 230 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் பாலாஜி மோகன் உள்ளிட்ட பலர் எஸ்எஸ்என் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள்.
எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் சிவ நாடார் இந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னாளில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகமு இங்கு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக, எஸ்எஸ்என் கல்லூரியே அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.