மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச்சொன்ன விவகாரம்; மறு தேர்வு தேதி அறிவிப்பு
கேரளாவில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச்சொன்ன விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த மையத்துக்கு மட்டும் மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார் தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மையத்தில் நடந்த நீட் தேர்வில், தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்க்கச் சொல்லிவிட்டு, எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்தனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாருக்கு தேசிய தேர்வு முகமை இப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும், தேர்வின்போது, அதற்குப் பிறகும் யாரும் இதுதொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. தேசியத் தேர்வுகள் முகமைக்கு எந்த விதமான இ-மெயிலோ, புகார்க் கடிதமோ வரவில்லை. தேசியத் தேர்வுகள் முகமையின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, மாணவியின் பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக செயல்பாட்டை என்டிஏ அனுமதிக்கவில்லை. ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள், தேர்வு முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யவே கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் தேர்வர்களை சோதனை செய்து, பாலின/ மத / கலாச்சார / பிராந்திய உணர்வுகளைப் புண்படுத்துவது நோக்கமல்ல'' எனத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தலைவருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், இந்த சம்பவம் முற்றிலும் கண்டணத்திற்குரியது. மாணவிகளின் மனநிலையினை முற்றிலும் சீர்குலைக்கக் கூடிய வகையில் தேர்வு முகமை அழுவலர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேசிய தேர்வு முகமை இச்சம்பவம் தொடர்பாக நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரளாவின் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மூன்று நாட்களுக்கு மீது முறையான வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய என்டிஏ, மீண்டும் அந்த மையத்துக்கு மட்டும் மறு தேர்வு நடத்த முடிவு செய்தது. இந்நிலையில், தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மையத்தில் தேர்வு எழுதிய மாணவிகளுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செப்.4-ல் மறு தேர்வு
இந்தத் தேர்வு, செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. கொல்லத்தில் உள்ள எஸ்.என். பள்ளியில் செப்.4 மதியம் 2 மணி முதல் 5.20 மணி முதல் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பப்படும் மாணவிகள் மட்டும் தேர்வை எழுதலாம். மறு தேர்வை எழுத விரும்பாத மாணவர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே எழுதிய நீட் தேர்வின் முடிவுகளே வெளியிடப்படும்.
ஒவ்வொரு ஆண்டு நீட் தேர்வின்போதும் தேர்வு எழுத வருபவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.