கரூர்: மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
என்னும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்கி வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் கேஷ் பொய்யாமொழி கூறினார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகப் பணிகள் குறித்தும், அரசு திட்டங்களை எவ்வாறு மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்பது குறித்தும் கல்வி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அதே வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் கல்வி தொடர்பான அரசு திட்டங்கள் குறித்து தெரிவித்து நல்ல முறையில் மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இதை அடுத்து அவர் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறை மிகப்பெரிய துறை. இந்த துறை மூலம் 231 தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பள்ளி, நூலகத்துறை, கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆகியவற்றில் 74 வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத இன்டர்நேஷனல் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள கல்வி முறைகளை தெரிந்து கொள்வதோடு தமிழக அரசு சார்பில் கல்வித்துறையில் எந்தெந்த விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அவர்கள் நேரில் வந்து பார்ப்பதற்கு அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
34 தொகுதிகளில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு 35 தொகுதியாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் கனவை நினைவாக்கும் விதமாக இத்துறையில் உள்ள அனைத்து அலுவலர்களும் தங்கள் முழு உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். என்னும் எழுத்தும் திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் அடிப்படை கல்வியை கற்று முழுமையான கல்வி அறிவை பெற்று அவர்களை திறமை மிக்க மாணவர்களாக உருவாக்க பணி செய்து வருகிறோம். ஏசியில் உட்கார்ந்து கொண்டு ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதை விட நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையின் அடிப்படையில் இந்த ஆய்வு பணியை செய்து வருகிறோம்.
பல்வேறு துறை சார்பில் ஆய்வுகள் செய்யப்பட்டாலும் அனைத்து தொகுதிகளிலும் உண்மையான ஆய்வு மேற்கொண்ட பின்னர் அது தொடர்பான அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளோம் கருத்து வேறுபாடு இன்றி ஆய்வு செய்யும் தொகுதிக்கு செல்லும்போது அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை உடன் அழைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறோம். இந்த துறை அரசியல் பார்க்கக்கூடாத ஒரு துறை. எதிர்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு பள்ளியில் நுழைவுத் தேர்வு என்பது தவறான ஒரு புரிதலாகும். இது தொடர்பான உரிய செய்தி குறிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார். இந்த ஆய்வில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.