Kalaignar Nootrandu Noolagam: கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து 100 நாட்கள்; 2.50 லட்சம் பேர் வருகை புரிந்து சாதனை!
மணலைத் தோண்டத் தோண்ட நல்ல நீர் ஊற்றெடுப்பதைப் போல, நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்கிறார் வள்ளுவர்.
“தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர்.
மணலைத் தோண்டத் தோண்ட நல்ல நீர் ஊற்றெடுப்பதைப் போல, நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்கிறார் வள்ளுவர்.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. நூலகங்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது புதுமொழி. இதை உணர்ந்த தமிழக அரசு, சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா பெயரில் மாபெரும் நூலகத்தைத் திறந்தது. மதுரையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் திறக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூலை 15ஆம் தேதி இந்த நூலகம் திறக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. குறிப்பாக சென்னை, கிண்டியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூரில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
இதனை தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி மதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி- நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன.
தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன.
நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்
இந்த நிலையில், மாமதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘’சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த 100 நாள்களில் 2,41,314 வாசகர்களும், மாணவர்களும், பொதுமக்களும் நூலகத்திற்கு வருகை தந்துள்ளார்கள் என்றும் மாமதுரைக்கு புதிய அடையாளமாக, தென் தமிழ்நாட்டின் அறிவுசார் தலைமையிடமாக, மாணவர்களின், இளைஞர்களின் வளமான வருங்காலத்தின் நுழைவு வாயிலாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திகழ்கிறது’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
101 நாட்கள் கடந்த நிலையில், 2.5 லட்சம் பேர் வருகை புரிந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.