JEE Main 2023 Application: ஜேஇஇ மெயின் 2023 தேர்வுகள், விண்ணப்பப் பதிவு எப்போது?- வெளியான தகவல்
2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான தேர்வுகள் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன. வழக்கமாக முதல் அமர்வு (session 1) ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு (session 2) ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. 2022ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜூன் 20 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு (session 2) ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் 2023 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதம் 3ஆவது வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டைப் போலவே இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன. முதல் அமர்வு (session 1) ஜனவரி மாதத்திலும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது.
இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன.
மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
கொரோனா காரணமாகப் பல்வேறு தேர்வுகள் பல முறை தள்ளிவைக்கப்பட்டு, கால தாமதமாக நடைபெற்றன. இந்த நிலையில் JEE, NEET மற்றும் CUET தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்