TNPSC: அரசு வேலை இனி கனவுதானா? டிஎன்பிஎஸ்சி மூலம் 2024-ல் வெறும் 3772 பேருக்கு வேலை? : ராமதாஸ் கேள்வி
பத்தாயிரத்தில் மூவருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கப்படும் என்பது படித்த இளைஞர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 வேலை மட்டுமே அளிக்கப்பட உள்ளதா? தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவுதானா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
’’தமிழக அரசுத் துறைகளுக்கு 2024ஆம் ஆண்டில் 18 வகையான பணிகளுக்கு சுமார் 3,772 பேர் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் 1.30 கோடி பேர் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களில் பத்தாயிரத்தில் மூவருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கப்படும் என்பது படித்த இளைஞர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 கணக்கில் சேர்க்க முடியாது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ஆம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித் தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 18 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ள ஆணையம், அவற்றில் 15 வகை பணிகளுக்கு 3439 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது. மீதமுள்ள 4 போட்டித் தேர்வுகளில் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட தேர்வாணையம் தவறி விட்ட நிலையில், அத்தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட்டு, ஜூன் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், குரூப் 4 பணிக்கான போட்டித் தேர்வுகளை 2024ஆம் ஆண்டுக்கான கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.
போட்டித் தேர்வுகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்படாத சிவில் நீதிபதிகள், ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள், பொறியியல் பணிகள் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் அடிப்படையில் கணக்கிட்டால், முறையே 245, 51, 37 என மொத்தம் 333 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களையும் சேர்த்தால் 2024ஆம் ஆண்டில், குரூப் 4 பணிகள் தவிர்த்து, 3,772 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும். இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
அரசு வேலைக்காக 1.30 கோடி பேர் காத்திருப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கல்வித் தகுதியுடன் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து வருகின்றனர். இவர்கள் தவிர வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் 31ஆம் நாள் நிலவரப்படி 64.22 லட்சம் ஆகும். இதே எண்ணிக்கையில் பதிவு செய்யாமல் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களையும் சேர்த்தால் அரசு வேலைக்காக 1.30 கோடி பேர் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களில் 0.029 விழுக்காட்டினருக்கு, அதாவது பத்தாயிரத்தில் மூவருக்கு தான் அரசு வேலை கிடைக்கும் என்றால், இது என்ன சமூகநீதி?
அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி கூட போட்டித் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை என்பதுதான் வேதனையான உண்மை. 2023ஆம் ஆண்டில் மொத்தம் 29 வகையான பணிகளுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதம் நிறைவடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை 13 போட்டித் தேர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கின்றன; 16 போட்டித் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவே இல்லை. அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளிலும் பல தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. இப்படித்தான் டி.என்.பி.எஸ்.சி செயல்பட்டு வருகிறது.
தவம் இருக்கும் இளைஞர்கள்
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தவம் கிடக்கின்றனர். அரசுத் துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். அவை முழுமையாக நிரப்பப்பட்டால் ஆண்டுக்கு 50ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும். ஆனால், அதை செய்வதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை. அரசே காலியிடங்களை நிரப்ப ஆணையிட்டால் கூட, முறையாகத் தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கு பணியாளர் தேர்வாணையம் தயாராக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை என்பதே கனவாகி விடும்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், காலியாக கிடக்கும் 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆண்டிற்கு 1.10 லட்சம் வீதம் மூன்று ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 30 ஆயிரம் பேருக்குக் கூட தமிழக அரசு வேலை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமூக நீதியையும் ஏற்படுத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு தமிழக அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.