State Education Policy: மாநிலக் கல்விக்கொள்கை குழுவில் தலையீடா? அமைச்சர் அன்பில் விளக்கம்; 2 உறுப்பினர்களைச் சேர்த்து உத்தரவு
மாநிலக் கல்விக்கொள்கை குழுவில் அரசு அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புதிதாக 2 உறுப்பினர்களைச் சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலக் கல்விக்கொள்கை குழுவில் அரசு அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, புதிதாக 2 உறுப்பினர்களைச் சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, நிகழ்காலச் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையினை வகுக்க தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்கென, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து 01.06.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
கடந்த ஓராண்டு காலமாக இக்குழு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட கள அளவில் கல்வி சார்ந்து செயல்படும் அனைவரிடமும் பொது கலந்துரையாடல் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். அத்துடன் ஆசிரியர் சங்கங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட பலருடனும் தனித்தனியான கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், குழுவினர் சில கல்வி நிறுவனங்களைப் நேரடியாக பார்வையிட்டு, அவர்கள் பார்வையிலிருந்து சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளையும்
எடுத்தனர்.
முழுமையான சுதந்திரம்
இவற்றைக் கடந்து, நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்காக அரசின் பல்வேறு துறைகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இக்கலந்துரையாடல்கள் குறிப்பாக கல்விக் கொள்கையின் தாக்கத்தை செயல்பாட்டுத் தரப்பிலிருந்து புரிந்து கொள்ளும் முனைப்புடன் நடத்தப்பட்டன.
பல்வேறு அரசு துறைகளின் செயலாளர்கள் தங்கள் துறை சார்ந்த கருத்துக்களையும் தரவுகளையும் குழுவின் முன் நேரில் விளக்கி அறிக்கையாக அளித்தனர். அரசு துறைகளுடன் நடந்த கலந்துரையாடல்கள் மிகவும் வெளிப்படையான முறையில் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. குழுவின் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை. குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது.
தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்களுடன் கூடிய ஒரு பொதுக் கொள்கை அறிக்கையை அளிப்பதே குழுவின் இலக்கு என்ற அடிப்படையில், கொள்கை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான நுட்பமான தொடர்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. ஒரு கொள்கை எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்க செயல்பாட்டு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனில், தற்போது நிலவும் சூழலின் பன்முகத் தன்மையை முழுமையாகப் புரிந்து உள்வாங்கியிருப்பது முதன்மையான தேவையாகும். இதை கவனத்தில் கொண்டே, களத்தில் நேரடியாக செயல்படுபவர்கள் தொடங்கி அரசின் உச்சஅதிகாரிகள் வரை தொடர்புடைய அனைவரிடமும் கலந்துரையாடுவதை குழு உறுதிப்படுத்தியது.
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், தமிழ்நாட்டிற்கெனெ ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில், ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் குழு செயல்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குழுவின் செயல்பாடுகள் மீது அரசு முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த உயர்மட்டக் குழுவில் கீழ்க்காணும் இரு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது:-
1. டாக்டர் டி. ஃப்ரீடா ஞானராணி, முதல்வர் (ஓய்வு), காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி, சென்னை.
2. டாக்டர். ஜி. பழனி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
கால நீட்டிப்பு
குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி குழு 2023 (செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும்.
குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கென சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.