International Day of Education: சர்வதேச கல்வி நாள் இன்று; எதற்கு, ஏன் கொண்டாடப்படுகிறது? கருப்பொருள் என்ன?
International Day of Education 2024: யுனெஸ்கோ சார்பில் 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதும் சர்வதேச கல்வி தினம் இன்று (ஜனவரி 24) கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில், இந்த தினம் (International Day of Education) கொண்டாடப்பட்டு வருகிறது.
கருப்பொருளுக்குக் காரணம் என்ன?
2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், நீடித்த அமைதிக்கான கற்றல் (learning for lasting peace) என்பதாகும். யுனெஸ்கோ சார்பில் 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து யுனெஸ்கோ கூறும்போது, ''வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதில் கல்வியும் ஆசிரியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர், இது சமீபத்திய ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் பயன்பட்டால், நமது சமூகத்தின் கட்டமைப்பை சேதப்படுத்தி இருக்கிறது.
இன்று 25 கோடி குழந்தைகளும் இளைஞர்களும் பள்ளிக்கு வெளியே இருக்கின்றனர். 76.3 பெரியவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கல்வி கற்பதற்கான உரிமை மீறப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவாகும்.
முன்னெப்போதையும் விட அமைதிக்கான தேவை இன்று மிகவும் அவசியம்
இன்றைய உலகம், பாகுபாடு, இனவெறி மற்றும் வெறுப்பு பேச்சு ஆகியவற்றின் எழுச்சிக்கு இணையாக, வன்முறை, மோதல்களின் அதிகரிப்பையும் காண்கிறது.
இந்த வன்முறையின் தாக்கம் புவியியல், பாலினம், இனம், மதம், அரசியல், என எல்லா எல்லைகளிலும் நிகழ்கிறது. அமைதிக்கான தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் அவசியமாக உள்ளது. இதை முன்னிட்டு 2024ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், நீடித்த அமைதிக்கான கற்றல் (learning for lasting peace) என்பதாக அனுசரிக்கப்பட்டு வருகிறது'' என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி தினம்
இதற்கிடையே இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய கல்வி தினம் நவம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலானா அபுல் கலாம் ஆசாத், நவம்பர் 11ஆம் தேதி பிறந்தார். அவரின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மெளலானா அபுல் கலாம் ஆசாத், 15 ஆகஸ்ட் 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

