ஹை ஜாலி.. பள்ளி திறந்ததும் பாடப் புத்தகங்களுக்கு வேலையில்லை; அப்போ என்ன சொல்லிக் கொடுப்பாங்க?
பள்ளிகள் திறந்ததும் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்களை எடுத்துவந்து படிக்க வேண்டியதில்லை. இதற்கு பதிலாக விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்படும்

2025- 26ஆம் கல்வி ஆண்டில் பள்ளி திறந்ததும் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியதில்லை என்று கேரள மாநில பொதுக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக சமூக விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுப்பு முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
நாட்டிலேயே முதல் முறை
இந்த நிலையில் சமூகத்தின் பல்வேறு முன்மாதிரி முன்னெடுப்புகளுக்கு, கேரள மாநிலம் முன்னோடியாகத் திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் முறையாக சமூகப் பிரச்சினைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறும்போது, ’’போதைப்பொருள் பயன்பாடு, பொது சொத்துக்களை அழித்தல் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இந்த இரண்டு வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்களை எடுத்துவந்து படிக்க வேண்டியதில்லை. இதற்கு பதிலாக விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
யாரெல்லாம் வகுப்புகளை எடுப்பர்?
காவல்துறை, கலால் துறை, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சமூக நீதி, தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) மற்றும் பிற தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற இரண்டு நாள் பட்டறைக்குப் பிறகு இந்த அமர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்தார்.
இந்த இரண்டு வாரங்களில் போதைப் பொருள் பயன்பாடு, வன்முறை நடத்தையை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், உணர்ச்சி கட்டுப்பாடு, சுகாதாரம் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்படும் என்று கல்வித் துறை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது?
ஜூன் 2 முதல் 2 வாரங்களுக்கு 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அமர்வு நடத்தப்படும். அதேபோல மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 18 முதல் 1 வார அமர்வு நடத்தப்படும் என்றும் கேரள மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.






















