ஐஐடி சென்னையில் புதிய படிப்பு! ஜேஇஇ தேவையில்லை- வேலைவாய்ப்பு உறுதி? விண்ணப்பிக்கலாம் வாங்க!
12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் எந்தவித வரம்பும் கிடையாது. ஐஐடி-ஜேஇஇ தகுதிக்கான தேவையும் இல்லை.

ஐஐடி சென்னை, தொழில்துறைக்குத் தயார்நிலைக் கல்வி கற்றலை விரிவுபடுத்தும் நோக்கில், வானூர்தியியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் (Aeronautics and Space Tech) பி.எஸ். பட்டப் படிப்பைத் தொடங்கியுள்ளது.
ஆன்லைன் முறையில் வழங்கப்படும் இந்த நெகிழ்வான இளங்கலை பட்டப்படிப்பு, விமானப் போக்குவரத்து, ஆளில்லா விமானம், விண்வெளி உற்பத்தி ஆகியவற்றின் தேசிய முன்னுரிமைகளைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர் படிப்புகளுக்கு வலுவான அடித்தளங்களையும் உருவாக்கும்.
என்ன படிப்பு?
இது ஆன்லைன் முறையில் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான இளங்கலை பட்டப்படிப்பாகும். வானூர்தியியல், விண்வெளி அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தொழில்துறை தொடர்பான பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்புத் திறனை கற்றுக்கொள்வோரைத் தயார்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலுவான தேசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆளில்லா வான்வழி வாகனங்கள், சிவில் விமானப் போக்குவரத்து, விண்வெளித் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் உள்ள திறன் இடைவெளிகளை நிரப்புகிறது. ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (CODE) மூலம் வேலைவாய்ப்பும், பயிற்சியும் வழங்கப்படும்.
சேர்வது எப்படி?
12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் எந்தவித வரம்பும் கிடையாது. ஐஐடி-ஜேஇஇ தகுதிக்கான தேவையும் இல்லை. கற்பவர்கள் குறிப்பிட்ட வரையறையில் சரியான வேகத்தில் முன்னேற முடியும்.
தொழில் நிபுணர்கள், மற்றொரு பட்டம் படிக்கும் மாணவர்கள், முதன்மை இளங்கலை தகுதிபெற விரும்புவோருக்கு ஏற்றதாக பாடத்திட்டம் அமைந்துள்ளது. மையங்களில் தேர்வு எழுதுவது, ஆன்லைன் மதிப்பீடு ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன,
இந்த பாடத்திட்டத்தை இன்று (பிப்ரவரி 9, 2026) ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ’’வானியல், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவை அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகளாகும். அவற்றுக்கு வேலைவாய்ப்புக்கு சிறப்பு மனிதசக்தி தேவைப்படுகிறது. இத்துறைகளில் சேரும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்ட மற்றொரு முயற்சிதான் இந்த பி.எஸ். படிப்பு.
பொதுத்துறை நிறுவனங்கள், உலகளாவிய விண்வெளி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பொறியியல் பகுப்பாய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
























