BS Data Science: ஐஐடி சென்னையில் 75% உதவித்தொகையோடு பிஎஸ் தரவு அறிவியல் படிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
பி.எஸ். டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்டவை.

ஐஐடி சென்னை சார்பில் நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமல் நடத்தப்படும் பிஎஸ் பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 75 சதவீதம் வரை உதவித்தொகையோடு இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் எங்கிருந்தும் எவரும், எந்த வயதினரும் எந்தப் பின்புலத்தை உடையவர்களும் இவ்விரு படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். மாணவர்கள் தங்களது வழக்கமான பட்டப்படிப்புகளுடன் இந்த பட்டப்படிப்பையும் தொடரலாம்
பி.எஸ். டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்டவை. இந்த இரண்டு படிப்புகளுக்கும் அடுத்த பேட்ச்சுக்கு விண்ணப்பிக்க மே 26 கடைசித் தேதி ஆகும். ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு வழிகளில் இப்படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மாணவர்கள் ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (JEE) எழுதாமலேயே சுயமாகத் தகுதிபெறும் நடைமுறை மூலம் இப்பாடத்திட்டத்தில் சேர முடியும்.
இரண்டாவதாக, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 அல்லது 2024 தேர்வுகளில் பங்கேற்றத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேரடி சேர்க்கையாகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்
எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, அது கோட்பாடு வகுப்புகள் மற்றும் ஆய்வகப் படிப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். மாணவர்கள் பரிசோதனைகளை தங்கள் வீட்டிலேயே செய்து அதன் முடிவுகளையும் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட மதிப்பீட்டிற்காக மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்கு வருகைதர வேண்டியிருக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பொறியியல், மானுடவியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் பிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்படிப்பிற்கான தகுதித் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள், அடிப்படை நிலைக்காக முதல் நான்கு பாடநெறி உள்ளடக்கங்களை நான்கு வாரங்களில் படிக்க வேண்டியிருக்கும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகள் அடிப்படை நிலையில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 25,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். பாடங்கள் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படும். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதந்தோறும் நேரடித் தேர்வு நடைபெறும். இதனால் பணிபுரியும் வல்லுநர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் தங்கள் வழக்கமான பணிகள் மற்றும் பட்டப்படிப்புடன் இதனைத் தொடர முடியும் என்றும் ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

