Educational Loan | கல்விக்கடனுக்கு எப்படி அப்ளை பண்ணனும்? என்னென்ன ஆவணங்கள் தேவை? எல்லாமே இங்க இருக்கு..!
கல்விக் கடன் பெற்று படிக்கலாம். படித்து முடித்த கையோடு வேலை கிடைத்ததும் கவுரவமாக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தலாம்.
![Educational Loan | கல்விக்கடனுக்கு எப்படி அப்ளை பண்ணனும்? என்னென்ன ஆவணங்கள் தேவை? எல்லாமே இங்க இருக்கு..! How to avail educational loan know the required documents and procedures here in the midst of pandemic Educational Loan | கல்விக்கடனுக்கு எப்படி அப்ளை பண்ணனும்? என்னென்ன ஆவணங்கள் தேவை? எல்லாமே இங்க இருக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/634ba3ebc10b580fe4efe8ce0193106a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
கல்வி எதற்காகவும் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னோர் சொல்லிவைத்தது. ஆனால் தற்காலத்தில் இப்படியாக யாசகம் பெற வேண்டாம், கல்விக் கடன் பெற்று படிக்கலாம். படித்து முடித்த கையோடு வேலை கிடைத்ததும் கவுரவமாக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தலாம். ஆனால் இதெல்லாம் எப்படிச் செய்வது எங்கே கேட்பது என்று நீங்கள் திணற வேண்டாம். உங்களுக்கான ஆலோசனைகளை இங்கே கையடக்கமாக..!
வங்கிக்குச் செல்ல வேண்டுமா?
கல்விக்கடன் கேட்டு வங்கி வங்கியா ஏறி இறங்கினோம் என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களுக்காக இந்தத் தகவல். கல்விக் கடன் பெற நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டாம். பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கல், மத்திய அரசின் https://www.vidyalakshmi.co.in/Students/ என்ற இணையதளத்திலேயே எளிமையான நடைமுறைகள் மூலம் கல்விக் கடனைப் பெறலாம். அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள மூன்று வங்கிகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அப்பா பர்சனல் லோன் வாங்கியிருந்தாலோ, அம்மா ஹோம் லோன் வாங்கியிருந்தாலோ அதெல்லாம் கல்விக் கடன் பெறுவதைப் பாதிக்காது.
எவ்வளவு கடன் வாங்கலாம்?
ஒரு மாணவர் அவர் தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு ஏற்ப கடன் பெறலாம். ஆனால், நீங்கள் சேரவிருக்கும் கல்வி நிறுவனம் யுஜிசி அங்கீகாரம் பெற்றதாக இருத்தல் அவசியம். ரூ.7.5 லட்சம் வரை ஒரு ஸ்லாப், ரூ.7.5 லட்சத்துக்கு மேல் ஒரு ஸ்லாப் என இரண்டு ஸ்லாப்களில் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற்ற மாணவர் கல்வியை முடித்து இரண்டு ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் கல்விக் கடனை 15 ஆண்டுகள் வரை இஎம்ஐ முறையில் செலுத்தலாம்.
என்னென்ன தேவை?
கல்விக் கடன் பெற பெற்றோரின் கையொப்பம் பெற்றால் போதுமானது. அதேவேளையில் பாதுகாவலர் அல்லது மூன்றாம் நபர் கையெழுத்து பெற்று கடனுக்கு விண்ணப்பித்தால் வட்டியில் மானியம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. கல்விக்கடன் பெற் பான் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிடச் சான்று, பெற்றோரின் வருமானவரிச் சான்று ஆகியனவற்றை பெற்று வைத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் எல்லா ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வங்கி கடனை வழங்கிவிடும். ஒருவேளை நிராகரிக்கப்பட்டால் மண்டல மேலாளரை அணுகலாம். அங்கும் பதில் கிடைக்காவிட்டால் மத்திய அரசின் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம். கொரோனாவால் நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், உயர்க்கல்வியைத் தொடர பொருளாதாரம் தடையாகிவிடுமோ என ஏங்கும் மாணவர்கள், எளிமையான நடைமுறைகள் மூலம் நிச்சயமாக கல்விக் கடன் பெற்று கனவை நனவாக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)