TNPSC Group 4: தேர்வு முறைகேடு; டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தீவிர ஆலோசனை - வெளியாகிறது முக்கிய அறிவிப்புகள்?
குரூப் 4, நில அளவர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. கூட்ட முடிவுக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 4, நில அளவர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. கூட்ட முடிவுக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆன நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதிகபட்சத் தேர்வர்கள் பங்கேற்பு
கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குரூப் 4 தேர்வில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர்.
கூடுதல் பணியிடங்கள் சேர்ப்பு
இதற்கிடையில் குரூப் 4 அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
எழுந்த புகார்கள்
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால் தேர்வு முடிவில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே தென்காசியில் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றனர். ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட தேர்வர்கள், ஒருசேரத் தேர்ச்சி பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல நில அளவர் தேர்வில் காரைக்குடி அருகே 700 பேர், ஒரே மையத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில், காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.
இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஆகியோரும் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அன்றே பதில் அளித்தார். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு நேரடியாகச் சென்று, அரசிடம் விளக்கம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குரூப் 4, நில அளவர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவர் முனியநாதன் தலைமையில், பாரிமுனையில் உள்ள அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்ட முடிவுக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.