Graduate Teacher Appointment: பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் !
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 400 பேருக்கு போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வழக்கில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 400 பேருக்கு போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வழக்கில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான நேரடித் தேர்வு முறையில் இருந்து 400 பேருக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
போட்டித் தேர்வு அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கான 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கான போட்டித் தேர்வு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் ( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.
இதற்கிடையே 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்காக காத்திருக்கும் நிலையில், போட்டித் தேர்வை நடத்தக்கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், மொகமது ஷஃபீக் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையும் வாசிக்கலாம்: NEET Coaching: மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ சிறப்புப் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு
வாழ்க்கை பாதிக்கப்படும்
அப்போது மனுதாரர்கள் தரப்பில், போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று காத்திருக்கும் நிலையில், போட்டித் தேர்வை நடத்தக்கூடாது. நடத்தினால் தங்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த 400 பேருக்கும் போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அதுவரை, 400 பணியிடங்களை காலியாக வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் வாசிக்கலாம்: மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை; இன்று முதல் நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?