அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
விருப்பமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம் என்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பால் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் உள்ள போதக காப்பாளர் , காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர் 7 காப்பாளினி பணியிடங்களை நிரப்ப விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
497 காப்பாளர் , காப்பாளினி பணியிடங்கள் காலி
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழுள்ள 1351 விடுதிகளில் தற்போது 497 காப்பாளர் , காப்பாளினி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அவ்விடுதிகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் சுணக்கம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்டங்களில் இத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகவுள்ள பட்டதாரி காப்பாளர் , காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர் , காப்பாளினி பணியிடங்களில் பணிபுரிய பள்ளிக் கல்வித் துறையின்கீழ் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / ஆசிரியைகள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்புவதற்கு ஆவண செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தங்கள் மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் , ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் , ஆசிரியைகள், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர் , காப்பாளினி பணியிடங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிரியர்களை விடுதி காப்பாளர் பணிக்கு அனுப்புவதா?
ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள சூழ்நிலையில், இருக்கும் ஆசிரியர்களையும் விருப்பத்தின் அடிப்படையில் விடுதி காப்பாளர் பணிக்கு அனுப்புவதா என்று ஆசிரியர்கள் மத்தியில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.