NEET Coaching Centers: சர்ச்சையான ஆளுநர் பேச்சு; நீட் தேர்ச்சிக்கு பயிற்சி மையங்கள் தேவையில்லையா? இதுதான் ஆதாரம்.. கல்வியாளர் நச் விளக்கம்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பயிற்சி மையங்கள் தேவையில்லையா? ஆளுநர் இன்று பேசியது உண்மையா என்பது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பயிற்சி மையங்கள் தேவையில்லையா? ஆளுநர் இன்று பேசியது உண்மையா என்பது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆக.12) கலந்து உரையாடினார். அப்போது பேசிய அவர், ''நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை குறைத்து விடும். என்னுடைய குழந்தைகள் நாட்டிலேயே சிறந்தவர்களாக, போட்டி போடுபவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அது தொடர்பான மசோதாவில் எந்தக் காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன். எனினும் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் விலக்கு தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளேன்.
பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்காமலேயே நீட் தேர்வில் நிறையப் பேர் தேர்ச்சி பெற்றதைப் பார்க்கிறேன். பள்ளிகளில் பாடம் நடத்தும்போதே மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யலாம். நீட் தேர்வுக்குப் பின்னரே மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர்.
சிபிஎஸ்இ புத்தகங்கள் போதும்
சிபிஎஸ்இ புத்தகங்களில் என்ன உள்ளதோ அதுவே நீட் தேர்வுக்குப் போதும். அதைத் தாண்டி வேறு எதுவும் தேவையில்லை. சிபிஎஸ்இ சிறப்பான பாடத்திட்டமாக உள்ளது. நீட் தேர்வு அதைத் தாண்டி இல்லை. இதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். நீட் இந்தியாவில் இருக்கத்தான் போகிறது'' என்று ஆளுநர் பேசி இருந்தார்.
வெல்லும் ரிப்பீட்டர்ஸ்
எனினும் இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், அரிதினும் அரிதாக மட்டுமே முதல்முறையாக நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறுவோரில் பெரும்பாலானோர் ரிப்பீட்டர்ஸ் என்று அழைக்கப்படும், நீட் தேர்வை 2ஆவது, 3ஆவது முறையாக எழுதுவோர் மற்றும் பயிற்சி மையங்களுக்குச் சென்று படித்தவர்கள் மட்டுமே.
இந்த நிலையில் ஆளுநரின் கருத்து குறித்து ABP Nadu-விடம் பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார். அவர் கூறியதாவது:
‘’பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாமே ஒழிய, அதிக மதிப்பெண்களைக் கட்டாயம் பெற முடியாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற 107 மதிப்பெண்கள் போதும். ஆனால் சுமார் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறவே பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதுதான் ஆதாரம்
நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு, அடுத்த நாளே தேசிய நாளிதழ்கள் அனைத்திலும், பயிற்சி மையங்களின் முழுப்பக்க விளம்பரங்கள் வருகிறது. எங்கள் மாணவர்கள் இத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று விளம்பரப்படுத்துகின்றன. இவை பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றுத்தான் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர் என்பதற்கான மிகப்பெரிய ஆதாரம். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். எனினும் 90 சதவீதத்துக்கு மேல் இப்படித்தான் இருக்கிறது.
கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுகிறார்களா?
நீட் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயனடைவதாகக் கூறுகின்றனர். ஆனால் நீட் மூலம் கிராமப்புற, பணக்கார மாணவர்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில், பிரபஞ்சன் என்ற தமிழக மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். இவர் கிராமப்புறமான செஞ்சியில் 10ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தாலும் 11, 12ஆம் வகுப்புகளை சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். அவரின் அப்பாவே, மகனின் படிப்புக்குப் பல லட்சம் செலவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதன்மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரிதாக பயனடைவதில்லை என்பதை உணரலாம்.
எண்ணிக்கையா? சதவீதமா?
நீட் தேர்ச்சியை யாரும் எண்ணிக்கை அடிப்படையில் சொல்லக்கூடாது. நீட் தேர்வு வருவதற்கு முன்பு, மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறைவு. இப்போது மருத்துவ இடங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்லூரிகளில் இப்போது அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்க, அரசின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுதான் காரணம். தற்போது ஒப்பீட்டளவில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும், ஒட்டுமொத்தத் தேர்ச்சி சதவீதம் குறைவாகவே உள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது உண்மையெனில், அந்த பாடத்திட்டத்தில் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பணக்கார மாணவர்கள்தான் என்பதை உணர வேண்டும். நீட் தேர்வுக்கு முன்னால் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
இவை அனைத்தின் மூலம் பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு பயன் அளிக்கிறது என்பது நிரூபணம் ஆகி உள்ளது.. ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கனவு எட்டாக் கனியாகி விட்டது.
வெள்ளை அறிக்கை வெளியிடுக
இவை அனைத்தையும் சரிசெய்ய, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம், அவர்கள் கிராமம் அல்லது நகரத்தைச் சேர்ந்தவர்களா? அவர்களின் பெற்றோர் விவரம், அவர்களின் ஆண்டு வருமானம் ஆகியவை குறித்து தேசியத் தேர்வுகள் முகமை வெளிப்படையான, உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும்’’.
இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.