முடக்குவாதத்தால் முடங்காமல், TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி: சாதனை படைத்த காஞ்சிபுரம் பெண்!
"காஞ்சிபுரத்தில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட, காயத்ரி என்ற பெண் முதல் முயற்சியிலேயே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டாலும், மூளையில் முடங்கி போகாமல் முடியும் என்று சாதித்து கட்டிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண், எழுதிய முதல் தேர்விலேயே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு
இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு கூட, கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. எவ்வளவு செலவு செய்தாலும் தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து விட வேண்டும் என்பதே, ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் சாதித்து வருகின்றனர்.
முடக்குவாத நோய்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், இவர் மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு காயத்ரி வயது 34, என்ற மகள் உள்ளார். காயத்ரி தனது 9 வயதிலேயே முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக மாறிபோய் உள்ளார்.
சாதனை நாயகியாக மாறிய காயத்ரி
மாற்றுத்திறனாளியாக உள்ள காயத்ரி, பெற்றோர்கள் உதவியுடன் வீட்டிலிருந்தபடியே பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று உள்ளார். இந்தநிலையில் முடக்குவாத நோயால் முடங்கிப் போகாமல் சாதிக்க வேண்டும் என நினைத்து சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஸ்சி குரூப் 4 அரசுப் பணிக்கான தேர்வினை கடினமாக உழைத்து படித்து தேர்வு எழுதி உள்ளார்.
காயத்ரிக்கு குவியும் பாராட்டுக்கள்
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாற்றுத்திறனாளியான காயத்ரி டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வில், தான் எழுதிய முதல் தேர்விலேயே வெற்றி பெற்று அசத்தி உள்ளார். முதல் தேர்விலேயே வெற்றி பெற்ற காயத்ரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முடக்குவாதத்தால் முடங்கிப் போகாமல் அரசுப் பணிக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று சாதித்துக் காட்டிய மாற்றுத்திறனாளி காயத்ரிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.





















