NEET CUET JEE Merge: ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு சாத்தியமா? சறுக்கலா?- மாணவர்களுக்கு என்னென்ன சிக்கல்... ஓர் அலசல்
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற வரிசையில் தற்போது நுழைவு தேர்வையும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.
நாட்டின் உயர் கல்வி ஆணையமான யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைத்து, ஒரே நுழைவுத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்குக் கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
அதேபோல மத்திய உயர் கல்வி நிலையங்களில் பொறியியல் படிக்க, JEE என்னும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது.
இந்த நிலையில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ( CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியாகி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடைபெற்றது.
ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு?
இந்நிலையில் நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்க யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு அமலாகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
நுழைவுத் தேர்வுகளை ஒன்றிணைப்பது குறித்துப் பேசிய யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார், ''நீட், JEE, CUET ஆகிய 3 நுழைவுத் தேர்வுகளே இந்தியாவின் முதன்மையான தேர்வுகள் ஆகும். இந்த 3 தேர்வுகளையும் சுமார் 43 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் இதில், குறைந்தபட்சம் 2 தேர்வுகளை எழுதுகின்றனர். ஒரே மாதிரியான அறிவை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் ஏன் ஒரே நேரத்தில் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்? இந்தத் தேர்வுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரே நுழைவுத் தேர்வின் மூலம், பல விதமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடுகிறோம்.
பொதுவாக சில மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளைப் படிக்க முயற்சிக்கின்றனர். அவை கிடைக்காதபோது CUET தேர்வு மூலம் பொது அறிவியல் படிப்புகளைப் படிக்கின்றனர். இதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் CUET தேர்வுடன் ஒன்றிணைத்து விடலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக பேனா- காகித முறையில் அல்லாமல், தேர்வுகள் வருங்காலத்தில் கணினி முறையில் நடத்தப்படும்'' என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். எனினும் யுஜிசி முடிவுக்குக் கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
எல்லா நுழைவுத் தேர்வுகளும் ஒன்றாக இணைக்கப்படுமா?
இதுகுறித்துக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறும்போது, ''நுழைவுத் தேர்வை ஒன்றாக இணைப்பது என்பது நீட், JEE, CUET ஆகிய 3 தேர்வுகளை மட்டுமா? CLAT, NIFT, CEEED UG, NATA உள்ளிட்ட மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளும் மாநில அரசு நுழைவுத் தேர்வுகளும் ஒன்றாக இணைக்கப்படுமா?
இவைதவிர நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. அவை என்ன ஆகும்? இந்தியா முழுவதும் இனி ஒரே ஒரு தேர்வு மட்டும் இருக்கப்போகிறதா? இது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும். தேவையில்லாமல் மாணவர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தும்.
3 முக்கிய நுழைவுத் தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே தேர்வாக நடத்தப்படும்போது நடைமுறையில் சிக்கல் ஏற்படும். ஒழுங்காக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த முடியாது.
கல்வியாளர்களின் கருத்து அவசியம்
இந்த முறை நடத்தப்பட்ட CUET தேர்விலேயே ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டன. பலமுறை தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தேர்வு மையங்களில் சிக்கல் ஏற்பட்டது. டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளுடன் தொழில்நுட்பக் கோளாறு இல்லாமல் தேர்வை நடத்த முடியுமா? அரசு இதுபோன்ற முக்கிய முடிவை எடுக்கும் முன்னதாகக் கல்வியாளர்களிடம் கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைப் பெற வேண்டியது அவசியம்'' என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
ஒற்றை நுழைவுத் தேர்வைக் கல்வி நிறுவனங்கள் எதிர்க்கும் என்கிறார் கல்வியாளர் அஸ்வின். இதுகுறித்து அவர் ABP நாடுவிடம் கூறும்போது, ''40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் 8 லட்சம் பேர் எழுதிய JEE தேர்விலேயே கட்டமைப்புப் பிரச்சினை எழுந்தது. சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
JEE தேர்வு என்பது இரண்டு கட்டங்களாக நடைபெறக்கூடியது. இதில் ஒரே தேர்வு என்பது எப்படி நடக்க முடியும்? NIESR, CMI உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்கள் தனித்தனியாகத் தேர்வுகளை நடத்துகின்றன. ஏனெனில் சராசரியான மாணவர்களைக் காட்டிலும் சம்பந்தப்பட்ட துறை ரீதியாக கூடுதல் திறன் கொண்ட மாணவர்களையே ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும்.
உதாரணத்துக்கு க்யூட் தேர்வில் கேட்கப்படும் கேள்வியின் கடினத்தன்மை, தரத்தைவிட கூடுதல் தரம் அவர்களுக்குத் தேவைப்படும். (ஏனெனில் கிராமப் புற மாணவர்களும் படிக்கும் வகையில் க்யூட் மாதிரியான கலை, அறிவியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுகள் எளிதாக அமைக்கப்படும். )
அந்தத் தேவை எல்லோருக்கும் பொது நுழைவுத் தேர்வு என்பதில் அடிபட்டுவிடும்.
மாணவர்களுக்குத் தேவையில்லாத சுமை
அதேபோல குறிப்பிட்ட படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள், அந்தப் படிப்பில் கூடுதல் அறிவை மாணவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதற்கேற்ற வகையில் கேள்வித்தாள்கள் அமைக்கப்படும். இவை எல்லாமே, ஒற்றை நுழைவுத் தேர்வால் அடிவாங்கும். இதைத் தவிர்க்க, கல்வி நிறுவனங்கள் தனியாக நுழைவுத் தேர்வையோ அல்லது நேர்காணலையோ நடத்தும். இது மாணவர்களுக்குத் தேவையில்லாத சுமையை ஏற்படுத்தும்.
ஒட்டுமொத்தமாக, தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இத்தகைய நுழைவுத் தேர்வு முறைக்கு ஒப்புக்கொள்ளாது. அடிக்கடி இதுபோன்ற அறிவிப்புகள் வருவது சகஜம்தான். ஆனால் இதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் நல்லது'' என்று கல்வியாளர் அஸ்வின் தெரிவித்தார்.
இதுதவிர நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் நீட், JEE பயிற்சிகளுக்குத் தனித்தனியாக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் வசூலிக்கின்றன. இந்த பயிற்சி மையங்கள் ஒற்றை நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற வரிசையில் தற்போது நுழைவு தேர்வையும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்துள்ளது. இன்னும் ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்ற கல்விமுறை நடைமுறைக்கு வராத பட்சத்தில் இந்த ஒரே நுழைவுத் தேர்வு என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை மத்திய அரசு யோசித்துப் பார்க்க வேண்டும்.