Model School Entrance Exam: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வா? - பள்ளிக் கல்வித்துறை மறுப்பு; விவரம்
அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவலுக்கு, பள்ளிக் கல்வித் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக வெளியான தகவலுக்கு, பள்ளிக் கல்வித் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
முன்னதாக மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன் ஐஏஎஸ் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், ’’9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும். தேர்வுக்கு, மாவட்டத்துக்கு 240 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 120 பேர் மாணவர்களும் 120 மாணவிகளும் இருப்பர்.ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் இருந்து நுழைவுத் தேர்வு எழுத தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பட்டியலை கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாதிரிப் பள்ளிகளில் சேர உள்ள மாணவர்களுக்கான தேர்வு மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் இந்தத் தகவலுக்கு பள்ளிக் கல்வித் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டிலுள்ள தலைசிறந்த கல்லூரிகளில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு 'நான் முதல்வன்', 'செம்மைப் பள்ளிகள்', 'மாதிரிப் பள்ளிகள்' ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உயர் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் உயர் கல்வி/ வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரிச் சுற்றுலாவும் முதன்முறையாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் வாயிலாக தங்களுக்கு அருகேயுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள பல்வேறு படிப்புகள் குறித்தும் அந்நிறுவனங்களின் ஆய்வகங்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளையும் பார்வையிட்டனர்.
இது மட்டுமல்லாமல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை சாத்தியமாக இருந்த IIT - IEE, CLAT (Common Law Admission Test), NID (National Institute of Design) போன்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு ஆர்வமும் திறமையும் உள்ள, செம்மைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 4,000 மாணவர்கள், பள்ளிக் கல்வித் துறை கொடுத்த ஊக்கமும் பயிற்சியும் காரணமாக தேர்வெழுதினர். அதில் வெற்றியும் பெற்று பல நூறு மாணவர்கள் அடுத்த நிலைகளுக்குத் தேர்வாகி உள்ளனர்.
தவறான புரிதல்
இந்த முன்முயற்சிகளின் அடுத்தக் கட்டமாக அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆர்வமும் திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும், தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் அம்மாணவர்கள் விருப்பப்படும் உயர் கல்வி நிறுவனங்களைச் சென்றடையும் வரை நீடித்த தொடர் கவனிப்பும் வழிகாட்டுதலும் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு (Baseline survey) நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தச் செய்தி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த
இருப்பதாக தவறாகப் பரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக ஏற்கெனவே தெளிவு படுத்தியுள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போதும் எவ்வித மாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டிலுள்ள செம்மைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உயர் கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து வழங்கும்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.